மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் அமைச்சர் பங்கேற்ற நிலையில், வெளியேயிருந்த அவரது அரசு காரில் யாருமில்லாத போது ஏசி (குளிரூட்டும் சாதனம்) இயங்குவதற்காக இன்ஜின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தும் காலத்தில், மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படும் எரிபொருள் இவ்வாறு விரயம் செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

பட்டமளிப்பு விழாவும் சர்ச்சையும்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று  ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். அமைச்சர் வருகையையொட்டி, கல்லூரி நுழைவாயில் பகுதியில் அவரது அரசு கார் நிறுத்தப்பட்டிருந்தது. விழா அரங்கினுள் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

ஆளில்லாத காரில் இயங்கிய இன்ஜின்

விழா முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் முன்னதாகவே, அமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இன்ஜின் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது. கார் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே ஓட்டுநரோ அல்லது வேறு யாருமோ இல்லாத நிலையில், குளிரூட்டும் சாதனம் (AC) மட்டுமே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முழுமையாக நிறைவடைந்து, விழா அரங்கிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிறகே அமைச்சர் தனது காரில் ஏறிப் புறப்பட்டார். அதுவரை, அதாவது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, யாருமில்லாத அந்த காரில் இன்ஜினும் குளிரூட்டும் சாதனமும் இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Continues below advertisement

மத்திய அரசின் சிக்கன உத்தரவும் மாநில நிலையும்

அரசுத் துறைகளில் செலவுகளைக் குறைக்கும் வகையில், ஒரே நேரத்தில் பல துறைகளை கவனிக்கக்கூடிய உயர்மட்ட அரசுச் செயலாளர்கள் கூட ஒரு காரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமீபத்தில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மத்திய அரசு அரசுத்துறை செலவினங்களில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தி வரும் வேளையில், மாநில அமைச்சர் ஒருவர் பங்கேற்ற விழாவில், வெறும் குளிரூட்டும் வசதிக்காக மட்டும் டீசல் வீணடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர்களின் கண்டனக் குரல்

யாருமில்லாத காரில் ஏசி இயங்குவதற்காக கார் இன்ஜின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "அமைச்சரின் சொகுசுக்காகவும், அவர் ஏறும் போது கார் குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படும் டீசலை இப்படி விரயம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் எரிபொருள் வளத்தைச் சேமிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும், இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் டீசல் விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆடம்பரப் போக்கைத் தவிர்க்க வேண்டும். ஓட்டுநர்களுக்கும் இதுகுறித்த உரிய விழிப்புணர்வை அரசு வழங்க வேண்டும்," என வலியுறுத்தினார்.

அரசின் சிக்கனக் கொள்கைகள் வெறும் காகித அளவிலேயே நிற்காமல், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அன்றாடச் செயல்பாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.