மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட 417 மனுக்களும், அவற்றின் பின்னணியில் எழுந்துள்ள சமூக ஆர்வலர்களின் கேள்விகளும் மாவட்ட மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Continues below advertisement

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்,  தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.07.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நேரடியாக ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குவிந்த மனுக்கள் - துறை வாரியான விவரம்

இன்றைய கூட்டத்தில் மொத்தம் 417 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றில் பெறப்பட்ட மனுக்களின் விவரம் வருமாறு.

Continues below advertisement

* மகளிர் உரிமைத்தொகை: 135 மனுக்கள்* அடிப்படை வசதிகள் கோரி: 61 மனுக்கள்* பல்வேறு புகார்கள் தொடர்பான மனுக்கள்: 53 மனுக்கள்* ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி:  41 மனுக்கள்* இலவச வீட்டுமனை பட்டா & பட்டா மாறுதல்: 39 மனுக்கள்* முதியோர், மாற்றுத்திறனாளிகள் & விதவை உதவித்தொகை: 32 மனுக்கள்* நில அபகரிப்பு & நிலப் பிரச்சினைகள்: 23 மனுக்கள்* மாற்றுத்திறனாளிகள் நல கோரிக்கைகள் (அடையாள அட்டை, கடனுதவி, உபகரணங்கள்): 17 மனுக்கள்* வேலைவாய்ப்பு கோரி: 16 மனுக்கள்இவற்றைத் தவிர இதர பல கோரிக்கைகள் சார்ந்த மனுக்களும் பெறப்பட்டன.

பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் மாவட்ட ஆட்சியர்  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மனுதாரர்களுக்குத் தாமதமின்றி முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குக் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபு வெங்கடேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சமூக ஆர்வலர்களின் ஆதங்கமும் கேள்விகளும்

ஒருபுறம் மனுக்கள் பெறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பெறப்படும் மனுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உள்ளூர் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதாவது;"ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்படுகின்றன. ஆனால், ஒரே நபர் அல்லது ஒரே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் மீண்டும் அதே கோரிக்கைகளுக்காக பலமுறை ஆட்சியரகத்திற்கு வந்து மனு அளிக்கும் சூழலே நிலவுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல் மற்றும் அடிப்படை வசதிகள் கோரிய மனுக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், கீழ்மட்ட அதிகாரிகள் அவற்றின் மீது உண்மையிலேயே கள ஆய்வு செய்து உரிய தீர்வு காண்கிறார்களா? அல்லது மனுக்களைக் கோப்பில் போட்டு முடக்குகிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற ஆட்சியரின் உத்தரவு எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது."

கோரிக்கை

எனவே, மாவட்ட நிர்வாகம் வெறும் மனுக்களைப் பெறுவதோடு நின்றுவிடாமல், முந்தைய வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.