மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி (ரௌடி) ஒருவர் மற்றும் போதைப் பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேர் என மொத்தம் 3 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. C. சினேகா பிரியா, பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கும் சமூக அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்குகளின் பின்னணி மற்றும் குற்றவாளிகளின் விவரங்கள்

கொலை முயற்சி வழக்கின் ரௌடி வினித் (20) கைது

Continues below advertisement

சீர்காழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிம்மேலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை, கடந்த 12.08.2026 அன்று முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார் சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஏசுபிள்ளை என்பவரின் மகன் வினித் (20).

இச்சம்பவம் குறித்து காயமடைந்த நபர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் புலன் விசாரணையை மேற்கொண்ட சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், குற்றவாளி வினித்தை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினார். கைது செய்யப்பட்ட வினித் மீது ஏற்கனவே சீர்காழி காவல் நிலையத்தில் போக்கிரி சரித்திர பதிவேடு (History Sheeter Rowdy) துவங்கப்பட்டு, காவல்துறையினரால் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்த குற்றவாளி ஆவார்.

காவேரி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்றவர் கைது

கடந்த 19.07.2026 அன்று மயிலாடுதுறை காவல் சரகம், காவேரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது, மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (20) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொருட்கள் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல்

இதேபோல், குத்தாலம் காவல் சரகத்திற்குட்பட்ட சேத்திரபாலபுரம் முதல் கடலங்குடி பிரிவு சாலையில் கடந்த 06.08.2026 அன்று குத்தாலம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த குத்தாலத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் செல்வகணபதி (27) என்பவரை மறித்துச் சோதனை செய்தபோது, அவர் விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வகணபதியைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த கஞ்சா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மற்றும் சிறையில் அடைப்பு

மேற்கண்ட 3 நபர்களும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்து வந்ததால், அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் தடுப்புச் சட்டம்) கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

மாவட்ட எஸ்பியின் பரிந்துரையை ஏற்றுப் பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மேற்கண்ட நபர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நேற்று (27.08.2026) வினித், சந்தோஷ்குமார் மற்றும் செல்வகணபதி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடப்பாண்டில் 43 பேர் மீது குண்டாஸ்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினரால் எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம், நடப்பாண்டில் (2026) இதுவரை மொத்தம் 43 நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் பின்வருமாறு

* கொலை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்: 05 நபர்கள்

* பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் (ரௌடிகள்): 13 நபர்கள்

* கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள்: 14 நபர்கள்

* மதுவிலக்கு (சட்டவிரோத மது) குற்றங்கள்: 08 நபர்கள்

* பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 02 நபர்கள்

* தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: 01 நபர்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் (குட்கா) விற்பனை செய்பவர்கள், மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்விதத் தயவுமின்றி தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. C. சினேகா பிரியா, கடுமையாக எச்சரித்துள்ளார்.