மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா விற்பனை, மதுவிலக்கு குற்றங்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி (History Sheeter) மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவர் மயிலாடுதுறை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் (Goondas Act) கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

ரகசியத் தகவலும் கஞ்சா வேட்டையும்

கடந்த ஜூலை 13, 2026 அன்று, மயிலாடுதுறை காவல் சரகத்திற்குட்பட்ட பல்லவராயன்பேட்டை மதகு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ்-க்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திடீர் 'கஞ்சா வேட்டை' மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே ரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

அதனைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான (History Sheeter) முருகேசன் என்பவரது மகன் 27 வயதான அபாயம் (எ) சுதர்சன் மற்றும் சுதர்சனின் கூட்டாளியான வீராசாமி என்பவரது மகன் விக்கி (எ) விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது.  அதனையடுத்து  அவர்களிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Continues below advertisement

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கைது செய்யப்பட்ட அபாயம் (எ) சுதர்சன் மற்றும் விக்கி (எ) விக்னேஷ் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் சமூக அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருந்து வந்ததால், அவர்களைத் தடுப்புக் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். மாவட்ட எஸ்பி-யின் பரிந்துரையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர்கள், குற்றவாளிகள் இருவரையும் கடலூர் மத்திய சிறையில்  அடைத்தனர்.

நடப்பாண்டில் 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 25 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றங்களின் வாரியான விவரம்

* கொலை வழக்குகள்: 05 நபர்கள்* பொது அமைதிக்குக் பங்கம் விளைவித்தல்: 07 நபர்கள்* மதுவிலக்கு குற்றங்கள்: 06 நபர்கள்* கஞ்சா விற்பனை / கடத்தல்: 06 நபர்கள்* பாலியல் குற்றங்கள்: 01 நபர்

மாவட்ட எஸ்பி கடுமையான எச்சரிக்கை

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களை மிரட்டும் ரௌடிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையாளர்கள்,சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் ஆகியோர் மீது எவ்விதத் தாட்சண்யமும் இன்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சினேஹா பிரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.