மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத சாராயம் மற்றும் மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200 -க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 700 பேரை சிறையில் அடைத்துள்ளார். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

Continues below advertisement

மது கடத்தல்காரர்களுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி 

இவ்வாறு, மயிலாடுதுறை மாவட்டத்தில் மது கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்குசக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் எஸ்.பி இன்ஸ்பெக்டர் கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தாகவும், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

பணிக்கு நடந்து செல்லும் டிஎஸ்பி 

இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் இன்று தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு பணிக்கு நடந்து சென்றது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேர்மையான டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பந்தோபஸ்து டியூட்டி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லுமாறு தூக்கி அடிப்பதும், பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்காமல் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ள காவல்துறையின் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாற்றம் 

மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியான சுந்தரேசன் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிஎஸ்பிக்கு வாகனம் வழங்கப்படாதது குறித்து மாவட்ட காவல்துறையில் விளக்கம் கேட்டபோது, அவரது வாகனம் பழுது காரணமாக ரிப்பேர் செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து டிஎஸ்பிக்கு தொல்லை

மேலும் முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் எஸ்பி இன்ஸ்பெக்டர் கேட்டதாகவும் அதற்கு சட்டத்தின் இடம் இல்லை என கூறி டிஎஸ்பி கொடுக்க மறுத்தாகவும், இதனால் அவரது நல்ல நிலையில் இருந்த வாகனத்தை பிடுங்கி கொண்டு அவருக்கு வேறு ஒரு பழைய பழுதான வாகனத்தை வழங்கியதாகவும், ஆனால் அதனை அவர் வேண்டாம் என கூறிவிட்டு, இருசக்கர வாகனத்தில் பணியை செய்து வந்தாகவும், இன்று அவர் இருசக்கர வாகனத்தையும் பயன்படுத்தாமல் நடந்து வந்த நிலையில் அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் மாவட்டத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் மாவட்ட காவல்துறை அதிகாரி தொடர்ந்து இவருக்கு பல்வேறு பின்னல்களை கொடுத்து வருவதாகவும் ஒரு புகார் இருந்து வருகிறது. இதன் காரணமாக நேர்மையாக பணியாற்றும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் டிஎஸ்பி சுந்தரேசன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

காவல்துறை மறுப்பு  

மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டமாகும். துணைக்காவல் இம்மாவட்டத்தில் தற்போது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். கடந்த 07.04.2025 முதல் TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் அலுவலக பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய அலுவலுக்காக கடந்த 11.07.2025-ந் தேதி அவர் பயன்படுத்தி வந்த TN 51 G0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் எடுக்கப்பட்டு, மாற்று வாகனமாக TN 51 G 0616 பதிவெண் கொண்ட Bolero வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் இன்று 17.07.2025-ந் தேதி மீண்டும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைக்காவல் கண்காணிப்பாளர்  சுந்தரேசன் என்பவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், மேற்கண்ட துணைக்காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.