மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஜிவிஎம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவரது கணவர் தியாகராஜன், வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர் ஆவார். இந்தத் தம்பதியினர் கடந்த 2011 ஆம் ஆண்டு பட்டமங்கலம் ஊராட்சி திருவள்ளுவர் தெரு பகுதியில், ஜெயலட்சுமி என்பவரிடமிருந்து ஆயிரம் சதுர அடி நிலத்தை முறைப்படி கிரயம் செய்து வாங்கியுள்ளனர். அந்த இடத்தைக் கடந்த சில மாதங்களாக திமுகவின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் செல்வமணி என்பவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.

Continues below advertisement

நிலத்தின் உரிமையாளரான ரேவதி, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனின்றி போகவே, இறுதியில் நீதிமன்றத்தை நாடிச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகே தனக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 14 ஆம் தேதி பட்டமங்கலம் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை ஆய்வு செய்வதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி நேரில் சென்றுள்ளார்.

மாவட்ட வருவாய் அலுவலரின் காரை மறித்து ரகளை

நேர்மையாகப் பணியாற்றி வரும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி தனது வாகனத்தில் வந்து நிலத்தைப் பார்வையிட்டபோது, அங்கு அதிரடியாக நுழைந்த திமுக மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, மாவட்ட வருவாய் அலுவலரின் காரை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். எவ்வித அச்சமுமின்றி ஓர் உயர்மட்ட அரசு அதிகாரியைக் காரை விட்டு இறங்க விடாமல் தடுத்து, மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு பெண் அதிகாரி என்றும் பாராமல், மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர்பதவியில் இருக்கும் வருவாய் அலுவலரையே பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்குதல் நடத்த முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Continues below advertisement

காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை

இந்த அத்துமீறல் சம்பவம் தொடர்பாக, பட்டமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் உடனடியாக முறைப்படி புகார் அளித்தார். ஆனால்,  அதிகார பலத்திற்கு அடிபணிந்த காவல்துறையினர், அரசு அதிகாரியை மிரட்டிய திமுக பிரமுகர் மீது எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல், அந்தப் புகாரை அப்படியே நிலுவையில் போட்டு மூடி மறைத்து விட்டனர்.

மாநிலத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுப் புதிய அரசுகள் பொறுப்பேற்றபோதிலும், சில அதிகாரிகளின் போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் பழைய நிலையே தொடர்வதாகவும், உயர்மட்ட அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலை நிலுவையில் உள்ள வழக்குகள் காட்டுவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வைரலான வீடியோவும் பொய் புகாரும்

இதனிடையே, நீதிமன்றத்தின் மூலம் மீட்கப்பட்ட அந்த நிலத்தில் ரேவதி தம்பதியினர் கட்டடப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த திமுக பிரமுகர் செல்வமணி, ரேவதிக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்து, நடந்து கொண்டிருந்த கட்டடப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டி கடும் மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. ரேவதி தம்பதியினரை மிரட்டும் இந்த அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது நில அபகரிப்பு முயற்சி அம்பலமானதை உணர்ந்த செல்வமணி, தந்திரமாக முந்திக்கொண்டு, ரேவதியும் அவரது கணவர் தியாகராஜனும் தன்னைத் தாக்கியதாகக் கூறி காவல்துறையில் பொய்யான புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் நியாயம் கேட்டுப் போராட்டம்

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரேவதி தம்பதியினர், செல்வமணி தங்களை அத்துமீறி மிரட்டிய வீடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர். இருப்பினும், வழக்கம் போல திமுக மாவட்ட துணைச் செயலாளருக்கு ஆதரவாகவே செயல்பட்ட காவல்துறையினர், வீடியோ ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, பாதிக்கப்பட்ட ரேவதி மற்றும் அவரது கணவர் தியாகராஜனையே மிரட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, கட்சி பிரமுகரின் ஆக்கிரமிப்பிற்குத் துணையாக நின்று தங்களை அச்சுறுத்தியதால், ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போயினர்.

பொதுமக்களின் கொந்தளிப்பும் குற்றச்சாட்டுகளும்

காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் மனமுடைந்த ரேவதி தம்பதியினர், நில அபகரிப்பு மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்மல்கப் புகார் மனு அளித்தனர். அவர்களின் மனுவைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் செல்லுமாறு தம்பதியினருக்குப் பரிந்துரை செய்தார். இருப்பினும், ஆளுங்கட்சியின் அதிகார காலம் முடிந்த பின்னரும் கூட, காவல்துறையினர் திமுக பிரமுகர்களுக்குக் கட்டுப்பட்டு, அவர்களுக்குச் சாதகமாக மட்டுமே செயல்படுவதாகப் பாதிக்கப்பட்ட தம்பதியினரும் அப்பகுதி பொதுமக்களும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.