மயிலாடுதுறை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் எழுதவுள்ள TNPSC தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வானது எதிர்வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இத்தேர்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் எவ்வித சிரமமும் இன்றி அமைதியான முறையில் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு மையங்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் இத்தேர்விற்காக ஏ.வி.சி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு முக்கியக் கல்வி நிறுவனங்கள் தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 19 சனிக்கிழமை முற்பகலில் நடைபெறும் கொள்குறி வகை எழுத்துத் தேர்வை ஏ.வி.சி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஏ.வி.சி பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு தேர்வு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 1035 தேர்வர்கள் எழுத உள்ளனர். அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகலில் நடைபெறும் விரித்துரைக்கும் வகைத் தேர்வானது ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் மட்டும் நடைபெறவுள்ளதாகவும், இந்த தேர்வினை ஒரு தேர்வர் எழுத உள்ளார் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் இயக்கம் செய்யப்பட உள்ளன. தேர்வு நடைபெறும் நேரத்தில் எவ்வித தடையுமின்றி மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துத் தேர்வுக்கூடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிகளை எதிர்கொள்ளும் வகையில் தேர்வுக்கூட வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு மையங்களின் பாதுகாப்பிற்காகப் போதுமான காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வர்களுக்கான நேரக் கட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடுகள்

இத்தேர்வில் பங்கேற்கும் தேர்வர்கள் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். முற்பகல் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்து சேர வேண்டும், காலை 9.00 மணிக்கு மேல் வருகை தரும் தேர்வர்களுக்குத் தேர்வுக்கூடத்திற்குள் நுழைய கண்டிப்பாக அனுமதி வழங்கப்படமாட்டாது.

அதேபோல் பிற்பகல் தேர்வெழுதும் விண்ணப்பதாரர் பிற்பகல் 1.30 மணிக்குள் மையத்திற்கு வருகை புரிய வேண்டும், பிற்பகல் 2.00 மணிக்கு மேல் வரும் நபர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தேர்வுக்கூடத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர், டிஜிட்டல் கடிகாரங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் எடுத்து வரக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி குறித்த நேரத்திற்குள் வருகை தந்து தேர்வைச் சிறப்பாக எழுதிட வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.