மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு முறையில் முகவரி மற்றும் உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் 'e-KYC' கைரேகைப் புதுப்பித்தல் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

Continues below advertisement

பொது விநியோகத் திட்ட சேவைகளை எவ்வித தடையுமின்றி பொதுமக்கள் பெறுவதற்கும், தகுதியான பயனாளிகளுக்குச் சீரான முறையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் இச்சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு முகாம்

இச்சிறப்பு முகாம்கள் ஜூலை 21, 2026 அன்று தொடங்கி ஜூலை 25, 2026 வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளன.

Continues below advertisement

முகாம் நடைபெறும் நாட்கள்:

 * 21.07.2026 (செவ்வாய்க்கிழமை)

 * 22.07.2026 (புதன்கிழமை)

 * 23.07.2026 (வியாழக்கிழமை)

 * 24.07.2026 (வெள்ளிக்கிழமை)

 * 25.07.2026 (சனிக்கிழமை)

முகாம் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்குச் சென்று எவ்வித சிரமமுமின்றி இச்சேவையைப் பெற்றுக்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடும்ப அட்டையில் உள்ள ‘அனைத்து உறுப்பினர்களுக்கும்’ கட்டாயம்!

இந்த e-KYC புதுப்பித்தல் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் (பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட) தவறாமல் நேரில் சென்று தங்களது விரல்ரேகையை (Biometric Authentication) பதிவு செய்து புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. 

பொது விநியோகத் திட்டத்தில் போலி உறுப்பினர்களை நீக்குவதற்கும், பயனாளிகளின் துல்லியமான விவரங்களைப் பராமரிப்பதற்கும் இந்த கைரேகைப் பதிவைப் புதுப்பிப்பது மிகவும் அவசியமாகும்.

முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் பகுதிகள்

பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு மையங்களில் இச்சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.

1. அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் (Taluk Offices):

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் பொதுமக்கள் இச்சேவையைப் பெறலாம்.

2. ஆதார் இ-சேவை மையங்கள் (Aadhaar e-Sevai Centres):

மயிலாடுதுறை மாவட்டத்தின் பின்வரும் முக்கிய வட்டாரங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் ஆதார் இ-சேவை மையங்களிலும் இ முகாம்கள் நடைபெறுகின்றன

 * மயிலாடுதுறை

 * குத்தாலம்

 * சீர்காழி

 * தரங்கம்பாடி

 * செம்பனார்கோவில்

 * கொள்ளிடம்

பொதுமக்கள் செய்ய வேண்டியவை

1. தேவையான ஆவணங்கள்: இ-கேஒய்சி (e-KYC) புதுப்பித்தலுக்குச் செல்லும்போது குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளை எடுத்துச் செல்வது நல்லது.

2. நேரடி வருகை: விரல்ரேகைப் பதிவு செய்யப்பட வேண்டுமென்பதால் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நேரில் வர வேண்டும்.

3.காலக்கெடுவை தவறவிடாதீர்கள்: இறுதி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஜூலை 25-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் உடனடியாகத் தங்களுக்கு அருகிலுள்ள மையங்களுக்குச் சென்று கைரேகைப் புதுப்பித்தல் பணியை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் இச்சேவையை மயிலாடுதுறை மாவட்டப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்தி, தங்களது ரேஷன் கார்டு விவரங்களை உடனுக்குடன் புதுப்பித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக ரேஷன் கடைகளில் சென்று கைரேகை பதிவு செய்ய சொல்லி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.