மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகளா.. குவிந்த மனுக்கள்...
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 287 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைக்கோடி மக்களும் தங்களின் நீண்ட காலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நம்பிக்கையுடன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து திரண்டு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஒரு வார காலத்திற்குள் மனுதாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குச் சுழற்சி முறையில் உத்தரவிட்டார்.
பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள்
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கூட்ட அரங்கிற்கு வருகை தந்த ஒவ்வொரு பொதுமக்களையும் சந்தித்து, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி உடனடியாகத் தீர்வுகாண வலியுறுத்தினார். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு மனுவின் நிலையும் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பொதுமக்களால் அளிக்கப்பட்ட 287 மனுக்களில், பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகப்படியான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. இதில், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் ஆர்வலர்களிடமிருந்து தொழிற்கடன் வழங்கக் கோரி அதிகபட்சமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான, இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 29 மனுக்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளோருக்கு ஆதரவாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 27 மனுக்களும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலப்பிரச்சினைகள் மற்றும் பல்வேறு பொதுப் புகார்கள் தொடர்பான மனுக்களும் கணிசமான அளவில் பெறப்பட்டன.
பெறப்பட்ட முக்கிய மனுக்களின் பிரிவுகள்
- தொழிற்கடன் வழங்கக் கோரி - 36
- பல்வேறு புகார்கள் தொடர்பாக - 35
- இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் - 29
- முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை - 27
- மாற்றுத்திறனாளிகள் நலன் (அடையாள அட்டை, உதவித்தொகை, உபகரணங்கள் - 21
- அடிப்படை வசதிகள் கோரி சாலை, குடிநீர், மின்சாரம் - 18
- ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி - 15
- சட்டம் ஒழுங்கு தொடர்பாக - 13
- நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்னை - 12
- குடும்ப அட்டை தொடர்பாக - 11
- இலவச கான்கிரீட் வீடு வேண்டி - 10
- வேலைவாய்ப்பு கோரி - 08
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் - 05
- தொழிலாளர் நலன் தொடர்பாக - 04
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் - 09
- இதர கோரிக்கைகள் - 34 என மொத்தம் - 287
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவுக்கரம்
பொதுமக்களின் மனுக்களைப் பெற்றபின், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுயதொழிலுக்கு ஊக்கம்: தையல் தொழிலில் ஆர்வம் கொண்ட 5 மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு, தலா ரூ. 6,820 மதிப்புள்ள, மோட்டார் பொருத்தப்பட்ட அதிநவீன தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.
தகவல் தொழில்நுட்ப அணுகுமுறை: கல்வி மற்றும் தகவல் தொடர்புகளை எளிதாக்கும் பொருட்டு, 2 பயனாளிகளுக்குத் தலா ரூ. 17,000 மதிப்பிலான ஸ்மார்ட் ஃபோன்களை அவர் வழங்கினார்.
இயற்கை வாழ்வுக்கான துணை: விபத்து அல்லது பிற காரணங்களால் உடல் உறுப்புகளை இழந்த 4 பயனாளிகளுக்கு, அவர்கள் சுயமாக நடமாடவும், தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்யவும் உதவும் வகையில், ரூ. 2,11,400 மதிப்பிலான செயற்கை கை மற்றும் செயற்கை கால்களை ஆட்சியர் வழங்கினார்.
மொத்தமாக, ரூ. 2,58,500 மதிப்பிலான இந்த நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமைந்தன.
இந்தக் கூட்டத்தில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உமாமகேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) அன்பழகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






















