மயிலாடுதுறை, செப்டம்பர் 21: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு ஓய்வூதியதாரர்களின் நீண்டகால குறைகளைக் களைந்து, அவர்களுக்குத் தேவையான விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், மாதாந்திர அல்லது சிறப்பு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தகவலை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகச் செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

கூட்ட விவரங்களும் சிறப்புப் பங்கேற்பும்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில், வருகிற 11.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை சரியாக 10.30 மணிக்கு இந்த ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த முக்கியக் கூட்டத்தில், மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதியவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காகத் திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்க உள்ளார்.

Continues below advertisement

யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களில், இதுவரை தங்களது ஓய்வூதியப் பலன்கள் (Pension Benefits) முழுமையாகக் கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர குறைகள் உள்ளவர்கள் மட்டும் இக்கூட்டத்திற்குத் தங்களது மனுக்களை அனுப்பலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு: மின்வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் கூட்டுறவு நூற்பாலைகளில் (Spining Mills) பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பக் கூடாது. மாறாக, அவர்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களைத் தொடர்புடைய துறைசார்ந்த உயர் அலுவலர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மனுக்கள் அனுப்பும் முறை மற்றும் விவரங்கள்

தங்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளைத் தீர்க்க விரும்பும் ஓய்வூதியதாரர்கள், தங்களது கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் (Duplicate Copies) தயார் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:

மனு அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை – 609 305.

மனுக்கள் தெளிவான கையெழுத்திலோ அல்லது கணினியில் தட்டச்சு (Typed) செய்யப்பட்டோ இருக்க வேண்டும். மேலும், மனுவில் கீழ்க்கண்ட விவரங்கள் தவறாமல் இடம்பெற்றிருக்க வேண்டும்:

1. பெயர், பதவி மற்றும் முழு முகவரி

2. ஓய்வு பெறும் போது பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர்

3. ஓய்வு பெற்ற நாள் மற்றும் ஆண்டு

4. ஓய்வூதியம் தொடர்பான குறைகளின் விரிவான விவரம்

5. குறைகள் தற்போது எந்த அலுவலகத்தில் அல்லது எந்த அலுவலரிடத்தில் நிலுவையில் உள்ளது

6. ஓய்வூதிய கொடுப்பாணை எண் (PPO Number)

7. தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய தேதிகள்

மனுக்கள் அனுப்ப கடைசி நாள்: தங்களது குறைதொடர்பான மனுக்களை உரிய விவரங்களுடன் 19.08.2026 (புதன்கிழமைக்குள்) மேற்குறிப்பிட்ட முகவரிக்குக் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

கூட்டம் நடைபெறும் நாள்: 11.09.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி.

ஏற்கனவே முந்தைய காலங்களில் மனுக்கள் அளித்து, அதுதொடர்பான விசாரணைகள் அல்லது கோரிக்கைகள் நிலுவையில் உள்ளவர்கள், தங்களது முந்தைய மனுக்களின் கடித எண்ணைக் (Letter Number) குறிப்பிட்டு தற்போதைய கடிதத்துடன் இணைத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஓய்வூதியதாரர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது ஓய்வூதியம் சார்ந்த அனைத்துக் குறைகளையும் உரிய ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பிப் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார். ஓய்வூதியர்களின் நலனைப் பேணிக் காப்பதில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.