சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வள்ளுவக்குடியில், கட்டி முடிக்கப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் பெரும் பதற்றத்தில் முடிந்தது. பழைய பொருட்களை ஏற்றிச் செல்ல வந்த லாரியைச் சிறைபிடித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

30 ஆண்டு கால சேவை - சிதிலமடைந்த கட்டிடம்

வள்ளுவக்குடியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தை வள்ளுவக்குடி, புங்கனூர், கொண்டல், நிம்மேலி, ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவம் சார்ந்து பயனடைந்து வருகின்றனர்‌. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கான மகப்பேறு சிகிச்சை, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மற்றும் அவசர கால முதலுதவிகளுக்காக 24 மணி நேரமும் மருத்துவர்களுடன் இந்த மையம் இயங்கி வந்தது.

காலப்போக்கில் இந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து, மேற்கூரை இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி நீண்டகாலமாகத் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர்.

நீதிமன்ற வழக்கு மற்றும் இடிப்பு உத்தரவு

மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழாவிற்குத் தயாராக இருந்த நிலையில், தனிநபர் ஒருவர் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகினார். புதிய கட்டிடம் அருகிலுள்ள ‘கரிக்குளம்’ எனும் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், அந்தப் புதிய கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. தங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மக்கள் நலனுக்கான கட்டிடம் இடிக்கப்பட உள்ளதை அறிந்த கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டல் - சீர்காழி சாலையில் இரண்டு முறை சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, "புதிய கட்டிடம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

லாரி சிறைபிடிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம்

இந்நிலையில், நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியாகச் செயல்படும் சித்த மருத்துவப் பிரிவில் இருந்த பழைய பொருட்களை ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்தது. இதைக் கண்ட கிராம மக்கள், புதிய கட்டிடத்தை இடிப்பதற்கான முதற்கட்டமாகப் பொருட்களைக் காலி செய்யவே லாரி வந்துள்ளதாகச் சந்தேகித்தனர்.

உடனடியாகத் திரண்ட நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள், அந்த லாரியைச் சிறைபிடித்து அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் குதித்தனர்.

"மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே!", "கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையை உடனே திற!", "ஏழை மக்களின் உயிரோடு விளையாடாதே!" எனத் தமிழக அரசுக்கு எதிராக ஆவேசமாகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை தோல்வி - போலீசார் அதிரடி

தகவலறிந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் கோட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும், "மருத்துவமனையைத் திறப்பதாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்கும் வரை லாரியை விடமாட்டோம்" என மக்கள் பிடிவாதம் காட்டினர். பல மணி நேரப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

வலுக்கட்டாயமாகக் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களைப் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, தயாராக இருந்த பேருந்து மற்றும் வாகனங்களில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. பெண்கள் கதறி அழுத நிலையிலும் அவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

பொதுமக்கள் அனைவரும் அகற்றப்பட்ட பிறகு, சிறைபிடிக்கப்பட்ட லாரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தால் வள்ளுவக்குடி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பெரும் பதற்றம் நிலவியது. கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையைப் பயன்படுத்த முடியாமல் போகுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஆழ்ந்துள்ளனர்.