சீர்காழி அருகே பரபரப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் - 2026 தேர்தலைப் புறக்கணிக்க முடிவு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 5 தலைமுறைகளாக பாதை வசதி இல்லாததைக் கண்டித்து, கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா, எருக்கூர் ஊராட்சியில் உள்ள வள்ளுவர் தெரு மக்கள், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதியான பாதை அமைத்து தரக்கோரி 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஐந்து தலைமுறைகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து தலைமுறை அவதி : வயல்வெளியே வழித்தடம்
எருக்கூர் ஊராட்சி வள்ளுவர் தெருவில் பல குடும்பங்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக (ஐந்து தலைமுறைகளாக) வசித்து வருகின்றனர். ஆனால், இன்று வரை இந்தப் பகுதிக்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
தற்போது இந்தப் பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல விளைநிலங்கள் மற்றும் வாய்க்கால் கரைகளையே பாதையாகப் பயன்படுத்தி வருகின்றனர். கோடை காலங்களில் ஒற்றையடிப் பாதையாக இருக்கும் இந்த வழித்தடம், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. சில நேரங்களில் இடுப்பளவு தண்ணீரில் நனைந்தபடியே ஆற்றைக் கடப்பது போல் கடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
மாணவர்களின் அவலநிலை மற்றும் மருத்துவ நெருக்கடி
பாதையற்ற இந்த அவலநிலை அப்பகுதி மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிப்பதாகப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர். மழைக்காலங்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது சேற்றில் நனைந்து ஆடை அழுக்காகி விடுவதால், கையில் ஒரு செட் மாற்றுத் துணியுடனேயே பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பள்ளிக்குச் சென்றவுடன் அங்குள்ள கழிவறையில் ஆடையை மாற்றிக் கொண்டு வகுப்பறைக்குச் செல்கின்றனர்.
இரவு நேரங்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், இந்தத் தெருவுக்கு பாதை இல்லாததால் எந்த வாகனங்களும் வர மறுக்கிறது. மிகவும் ஆபத்தான கட்டங்களில் கூட 108 ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே வர வழியில்லாததால், நோயாளிகளைத் தூக்கிக் கொண்டு மெயின் ரோடு வரை ஓட வேண்டிய சூழல் நிலவுகிறது என வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகளின் வெற்று வாக்குறுதிகள்
இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் தனது பல ஆண்டு வேதனையினை கூறுகையில், "தேர்தல் வரும்போது மட்டும் அரசியல் கட்சியினர் வரிசை கட்டி வருகிறார்கள். 'உங்களுக்குச் சாலை அமைத்துத் தருவதுதான் எங்களது முதல் வேலை' என்று வாக்குறுதி அளித்து ஓட்டு வாங்கிச் செல்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பிறகு ஒருமுறை கூட எங்கள் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. அதிகாரிகளும் எங்களைக் கண்டுகொள்வதே இல்லை," எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தேர்தல் புறக்கணிப்பு: கருப்புக் கொடி போராட்டம்
அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, வள்ளுவர் தெரு மக்கள் ஒருமித்த கருத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஒவ்வொரு வீட்டின் கூரையிலும், தெருக்களிலும் கருப்புக் கொடி கட்டியும், தெருவின் நுழைவாயிலில் "எங்கள் பகுதிக்குச் சாலை அமைத்துத் தந்தால் மட்டுமே 2026 தேர்தலில் வாக்களிப்போம்; அதுவரை தேர்தல் புறக்கணிப்பு" என்ற வாசகங்கள் அடங்கிய பெரிய பேனர்களை வைத்துள்ளனர்.
கண்டன கோஷங்கள்
நீண்ட நாள் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் அரசை எதிர்த்து மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மற்றுமொரு குடியிருப்பாளரான ராஜேந்திரன் கூறுகையில், "நாங்கள் இந்த மண்ணின் குடிமக்களாக மதிக்கப்பட வேண்டுமானால் எங்களுக்குச் சாலை வேண்டும். அடிப்படை உரிமையான பாதையே இல்லாத போது, நாங்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? சாலை அமைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்," என உறுதிபடத் தெரிவித்தார்.
நிர்வாகத்தின் பதில் என்ன?
மக்களின் இந்தப் போராட்டம் குறித்துத் தகவல் அறிந்ததும், வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், "வாக்குறுதிகள் வேண்டாம், சாலைப் பணியைத் தொடங்கினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்" என்பதில் எருக்கூர் வள்ளுவர் தெரு மக்கள் உறுதியாக உள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஒரு கிராமமே தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது மயிலாடுதுறை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட்டு இந்தப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























