மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் திடீரென அமளியில் ஈடுபட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் முன்பு நடைபெற்ற இச்சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆட்சியர் முன்பு கொதித்தெழுந்த விவசாயிகள்

அப்போது கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விவசாயிகள் திடீரென எழுந்து நின்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கடந்த ஜனவரி மாதம் மாவட்டத்தில் பெய்த பருவம் தவறிய கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஜூன் மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்திருந்ததாகவும், ஆனால், ஜூலை மாதம் முடிவடைய உள்ள நிலையிலும் இதுவரை நிவாரணம் வழங்கப்படாததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆட்சியர் முன் தர்ணா, முழக்கங்கள், வெளிநடப்பு!

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து, கூட்ட அரங்கிலேயே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரத்த குரலில் முழக்கங்களை எழுப்பினர். "பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கு", "விவசாயிகளைக் காக்கத் தவறிய அரசே, திரும்பிப் பார்" போன்ற கோஷங்களால் கூட்ட அரங்கம் அதிர்ந்தது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளை சமாதானப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பலமுறை முயற்சி செய்தார். ஆனால், அவரது சமாதான முயற்சிகளை ஏற்க மறுத்த விவசாயிகள், தங்களுக்கு நிவாரணம் வழங்கப்படாதது குறித்து கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஒருகட்டத்தில், விவசாயிகள் கூட்ட அரங்கிலிருந்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

எச்சரிக்கை விடுத்த விவசாயிகள் 

வெளிநடப்பு செய்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு கடந்த ஜூன் மாதத்துக்குள் நிவாரணம் பெற்று தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்துள்ளோம்." மேலும், "அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாவிட்டால், மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளையும் திரட்டி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று துரைராஜ் தெரிவித்தார்.

குறுவை தொகுப்பு திட்டம் குறித்தும் குற்றச்சாட்டு

நிவாரணப் பிரச்சனை மட்டுமின்றி, தமிழக அரசு அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் இதுவரை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் கூட்டாகக் குற்றம் சாட்டினர். இத்திட்டம் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை என்பது அவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏற்பட்ட அமளி, விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளையும், அரசுத் தரப்பில் உள்ள காலதாமதங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அரசுத் தரப்பில் இருந்து எந்த ஒரு சாதகமான பதிலும் வராத பட்சத்தில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டக்களமாக மாறும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசின் கவனத்தை ஈர்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்கப்பெறுமா என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.