மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை கடந்த பல வாரங்களை விட பாதியாகக் குறைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 164 மனுக்கள் பெறப்பட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Continues below advertisement

மனுக்கள் எண்ணிக்கை சரிவு; 300-லிருந்து 164 ஆகக் குறைந்தது

கடந்த பல வாரங்களாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்து வந்தன. ஆனால், இன்றைய கூட்டத்தில் அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, மொத்தம் 164 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதன் காரணமாகவே மனுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மனுக்களின் வகைப்பாடு

இன்று பெறப்பட்ட 164 மனுக்களில், அடிப்படைத் தேவைகள் முதல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வரையிலான பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

Continues below advertisement

* நிலம் சார்ந்தவை: இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 25 மனுக்களும், நில ஆக்கிரமிப்பு அகற்ற 6 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக 8 மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

* சமூகப் பாதுகாப்பு: முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 8 மனுக்களும், இலவச கான்கிரீட் வீடு வேண்டி 8 மனுக்களும் பெறப்பட்டன.

* வேலைவாய்ப்பு மற்றும் கல்வி: வேலைவாய்ப்பு கோரி 4 மனுக்களும், தொழிற்கடன் தொடர்பாக 8 மனுக்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக 9 மனுக்களும் வந்தன.

* இதர சேவைகள்: குடும்ப அட்டை தொடர்பாக 6, அடிப்படை வசதிகள் கோரி 22, சட்டம் ஒழுங்கு தொடர்பாக 9, மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த உபகரணங்கள் மற்றும் உதவித்தொகை கோரி 15 மனுக்கள் எனப் பல தரப்பட்ட கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளிக்கப்பட்டன.

இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவற்றை ஒப்படைத்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மனுதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ரூ.7.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

*தொழில்நுட்பக் கல்வி உதவி: முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 மாணவர்களுக்கு தலா ரூ. 50,000 வீதம் மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வரைவோலைகள் வழங்கப்பட்டன.

* மாற்றுத்திறனாளிகள் நலன்: ஒரு பயனாளிக்கு ரூ. 1.06 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்புச் சக்கர நாற்காலியும், இருவருக்குத் தலா ரூ. 6,350 மதிப்பிலான தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

* பெண் குழந்தைகள் பாதுகாப்பு: சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ. 1.39 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது.

* அடையாள அட்டைகள்: மூன்றாம் பாலினத்தவர் 4 பேருக்கு உரிய அடையாள அட்டைகளை ஆட்சியர் வழங்கினார்.

மகளிர் குழுக்களிடம் அறிவு மையம் ஒப்படைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் கீழையூர் கிராமத்தில் கட்டப்பட்ட அறிவு மையக் கூடத்தை, அக்கிராம மகளிர்க்குழு உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இன்று முறைப்படி ஒப்படைத்தார். இம்மையம் முன்னதாக தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயராமன் மற்றும் பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.