மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற ஆட்சியர் மகாபாரதி சிறுமி பாலியல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய நிலையில் மாற்றப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சியர் 


தமிழ்நாட்டின் கடைசி 38 வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக திருவள்ளூர் துணை ஆட்சியராக பொறுப்பு வகித்த ஏ.பி.மகாபாரதி கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் சிறப்பாக சிறப்பாக பணியாற்றி மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற ஆட்சியராக திகழ்ந்தார். மேலும் மக்கள் அனைவரும் எளிதில் அனுக கூடிய ஆட்சியராகவும் விளங்கினார்.



இவர் இப்படியா பேசினாரு..? ஊரே பாராட்டிய ஆட்சியரை ஒரே நாளில் மாற்றிய பேச்சு..


கல்விக்கு அதிமுக்கியத்துவம் 


கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் செயல்பட்டு வந்தார். குறிப்பாக விவசாயம் மற்றும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி திறன்குறித்து சோதனை செய்து கல்வியில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் வழிவகை மேற்கொண்டார்.


திடீர் மாற்றம் 


இந்நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் ஒய்வு பெற உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் பொறுப்பேற்க உள்ளார். இந்த திடீர் அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மாற்றத்திற்கான காரணம்


சிறப்பாக செயல்பட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றத்திற்கு காரணமாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.


சிறுமி பாலியல் துன்புறுத்தல் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மதியம் உணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே வந்த குழந்தை காணாமல் போயுள்ளது. உடனே அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் அருகில் உள்ள பகுதிகளில் சிறுமியை தேடியுள்ளனர். 




குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் 


அப்போது அங்கன்வாடி கட்டிடத்துக்கு பின்புறம் உள்ள சந்து பகுதியில் சிறுமியின் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமி தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அங்கன்வாடி மைய கட்டிட வாயில் பகுதிக்கு வந்து சென்றதையும் பார்த்துள்ளனர்.


காவல்துறையினர் விசாரணை 


உடனடியாக இது குறித்து தகவல் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர் அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 


 


இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதனால் குழந்தை அலறியதால் செங்கல்லை எடுத்து தலையில் தாக்கியதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. 


சிறார் கூர்நோக்கு இல்லம்


அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை சீர்காழி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோவில் கைது செய்தனர். சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தஞ்சாவூர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர்களையும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆட்சியர் சர்ச்சை பேச்சு 


இந்நிலையில் மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.


அப்போது, சீர்காழியில் கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி 17 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியபோது, இந்த சம்பவத்தில் குழந்தையே தப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுபோன்ற விஷங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் என சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். மூன்றரை வயது சிறுமி சிறுவனின் முகத்தில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆட்சியர் மாற்றம்


ஆட்சியர் இந்த பேச்சு சமூகவலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் வைரல் ஆன நிலையில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றப்பட்டு அவருக்கு பதில் புதிய மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.