திருவாரூரில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து வழங்க உள்ள இலவச டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continues below advertisement

மயிலாடுதுறை: வேலையில்லா இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்குத் தொழில்முறைத் திறன் பயிற்சியினை வழங்கும் நோக்கோடும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் இலவச டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ளார். 

நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சிப் பள்ளி

திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் வேளாண் கருவிகள் பணிமனையில் இந்தப் பயிற்சிப் பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இப்பள்ளியில் பயிற்சியாளர்கள் நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சியினைப் பெறும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.

Continues below advertisement

* டிராக்டர் வெட்டுத் தோற்ற மாதிரி (Tractor Cut Section Model): பயிற்சியாளர்கள் டிராக்டரின் என்ஜின் பாகங்கள் மற்றும் அதன் உட்புறச் செயல்பாடுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில், ஒரு டிராக்டரின் வெட்டுத் தோற்ற மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயந்திரத்தின் நுணுக்கங்களை எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

* இரட்டைக் கட்டுப்பாட்டு வசதி (Double Control System): பயிற்சியினை எளிமையாக்கவும், பாதுகாப்பினை உறுதி செய்யவும் இரட்டைக் கட்டுப்பாட்டு வசதி கொண்ட புதிய டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. இது ஓட்டுநர் பயிற்சியை முதன்முதலாகப் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

பயிற்சி காலம் மற்றும் தகுதிகள்

இப்பயிற்சியில் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இந்தப் பயிற்சியில் சேருவதற்கு எவ்விதக் கல்வித்தகுதியும் தேவையில்லை. எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி ஒரு தடையல்ல.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சி நேரம்: இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மொத்தம் 210 மணிநேரம் (சுமார் 27 நாட்கள்) தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொடக்கத் தேதி

இலவச டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியானது வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://candidate.tnskill.tn.gov.in என்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இணையதளம் வாயிலாகப் பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது கூடுதல் விபரங்கள் தேவைப்படுபவர்கள் திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் அமைந்துள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

மேலும், கீழ்க்காணும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

உதவி செயற்பொறியாளர்: 9952877189

உதவிப் பொறியாளர்: 7904283434

வேளாண் இயந்திரமயமாக்கலில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த அறிய வாய்ப்பினை மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆர்வம் உள்ள இளைஞர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீ காந்த், கேட்டுக்கொண்டுள்ளார். இப்பயிற்சியின் முடிவில் தகுதியானவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.