மயிலாடுதுறை: தமிழ்ச் சைவத் திருமடங்களில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-வது மணிவிழா மாநாடு நேற்று மாலை மயிலாடுதுறையில் கோலாகலமாகத் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆன்மீக மற்றும் கலை மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில், புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரும் இளையராஜாவின் மகனுமான கார்த்திக் ராஜாவின் இன்னிசை மழை பொழிந்தது. இந்த விழாவில் அவருக்கு 'ஆதீன இசைப் புலவர்' என்ற உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இது தனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்ததாகக் கார்த்திக் ராஜா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மணிவிழா மாநாடு தொடக்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியின் பிரமாண்ட அரங்கத்தில் நடைபெறும் தருமபுரம் ஆதீன கர்த்தரின் மணிவிழா மாநாட்டின் தொடக்க விழா நேற்று மாலை துவங்கியது. இதில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கினார். பல்வேறு ஆன்மீகப் பெரியோர்கள், கல்விமான்கள் மற்றும் திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாலை நடைபெற்ற இன்னிசை கச்சேரியை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா அரங்கேற்றினார். ஆன்மீகமும், இசையும் சங்கமித்த இந்த விழாவில், கார்த்திக் ராஜா தனது தேர்ந்த இசை ஞானத்தால் அனைவரையும் கட்டிப்போட்டார்.
பக்திப் பாடல்களும், உருக்கமான கீதங்களும்!
கச்சேரியை 'ஜகம் நீ ஜனனி' என்ற பக்திப் பாடலுடன் துவக்கிய கார்த்திக் ராஜா, தொடர்ந்து பல மனதை உருக்கும் திரைப்படப் பாடல்களையும், பாரம்பரியமான பக்திப் பாடல்களையும் பாடினார். குறிப்பாக, 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' போன்ற உணர்வுபூர்வமான பாடல்களை அவர் பாடியபோது அரங்கம் முழுவதும் அமைதி நிலவியது. ஆதீனம் உட்பட அனைவரும் இசையில் மூழ்கி ரசித்தனர்.
கச்சேரி முடிவில், தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள், இசையால் மக்களை வசீகரித்த கார்த்திக் ராஜாவை மனதாரப் பாராட்டி, அவருக்கு தருமபுரம் ஆதீன இசைப் புலவர்' விருதை வழங்கி கௌரவித்தார்.
'இசைப் புலவர்' விருது - இன்ப அதிர்ச்சி!
இசை நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், "தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இது வெறும் வாய்ப்பு மட்டுமல்ல, ஒரு பெரிய மரியாதை. இவ்வளவு பெரிய மரியாதை கிடைத்ததற்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. ஆதீனத்துக்கு என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "எனது இசை நிகழ்ச்சியை குருமகா சந்நிதானம் அவர்கள் முழுவதுமாக அமர்ந்து, ரசித்து, 'நன்றாக இருந்தது' என்று சொன்னது எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். எதிர்பாராத விதமாக, தருமபுரம் ஆதீனத்தின் 'இசைப் புலவர்' என்ற விருதை எனக்கு வழங்கி அவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்," என்று பெருமிதம் பொங்கத் தெரிவித்தார்.
"ஆத்தா ஆத்தோரமா வாரியா..." - கார்த்திக் ராஜாவின் சுவாரஸ்யம்!
இந்த விருது குறித்து ஆதீனப் புலவர் ஒருவர் பேசும்போது, இதற்கு முன்பு 26-வது குருமகா சந்நிதானத்தால் இந்த விருது பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ்சுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அப்போது இடைமறித்துப் பேசிய கார்த்திக் ராஜா ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பதிவு செய்தார்.
"கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பெற்ற விருதுக்குப் பிறகு நான் வாங்கும் போது, நான் ரொம்பவும் சின்னவனாகத் தெரிகிறேன்," என்று சிரித்தபடியே கூறினார்.
மேலும், அவர் ஆதீனத்தின் புனிதமான சூழல் குறித்தும் பேசினார். "தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள் இங்கே இருந்ததால், நான் மிகவும் சுவாரசியமான, உற்சாகமான பாடல்களைப் பாடவில்லை. 'நீங்கள் (ஆதீனம்) கேட்டிருந்தால் கூட, ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா' என்ற பாடலைக்கூட நான் பாடத் தயாராக இருந்தேன். ஆனால், இந்த இடமும், சூழலும் அதற்கான உகந்த இடம் அல்ல. இருப்பினும், நான் பாடிய 'பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்' என்ற பாடலை ஆதீனம் அவர்கள் ரசித்துக் கேட்டது எனக்குப் பெருமையாக இருந்தது," என்று அவர் தெரிவித்தார்.