மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் புதிய சட்டத் திருத்தங்கள் ஜனநாயகத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
கூட்டாட்சிக்கு அச்சுறுத்தல்
மத்திய பா.ஜ.க. அரசு சமீபத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது திருத்தம் என்ற பெயரில் மூன்று புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே, ‘உஃபா சட்டம்’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களை விசாரணை இல்லாமல் காலவரையின்றி சிறையில் அடைக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் பல அறிஞர்கள் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தை மேலும் கடுமையாக்கும் வகையில், ‘பி.என்.எஸ்.’ என்ற புதிய சட்டம் திருத்தப்பட்டு, தற்போது ‘முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதமர் உட்பட யாராக இருந்தாலும் 30 நாள்கள் சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவி விலக நேரிடும்’ என்ற புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து பெ.சண்முகம் பேசுகையில், “ஏற்கெனவே, அமலாக்கத்துறை மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என்ற பெயரில் வழக்குப்பதிவு செய்வது, கைது செய்வது போன்றவற்றை மத்திய அரசு செய்து வருகிறது. இந்தப் புதிய மசோதா, தங்களுக்குப் பிடிக்காத முதலமைச்சர்கள், அமைச்சர்களைக் கைது செய்து 30 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்க உதவும். இது முற்றிலும் ஜனநாயகத்திற்கும், மாநில அரசாங்கங்களின் உரிமைகளுக்கும் எதிரானது. பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கிறது என்ற ஆணவத்தில், தாங்கள் நினைக்கும் வகையில் சட்டங்களை உருவாக்குவது ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாதது. இந்தியாவின் கூட்டாட்சியை மதிக்கும் அனைவரும் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த புதிய மசோதாவை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் மற்றும் கேரள முதலமைச்சர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், உடனடியாக இந்த புதிய மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சாதி ஆணவக் கொலைகள்: புதிய சட்டம் தேவை
சாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை ஆணவக் கொலை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருவதாக பெ. சண்முகம் சுட்டிக்காட்டினார். “2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 65 சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்றதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள தமிழ்நாட்டில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவது மிகப்பெரிய தலைகுனிவு,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மற்றும் தூண்டுபவர்களைத் தண்டிக்கக்கூடிய வகையில், சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகப் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோருடன் இணைந்து தான் தமிழக முதல்வரிடம் கடந்த 6-ஆம் தேதி வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். நிச்சயமாக அதற்கான சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் தொடரும்
துப்புரவுப் பணியாளர்களின் போராட்டம் தொடர்பாகப் பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்று கூறினார். “பணி நிரந்தரம் செய்யக் கூடாது, தனியாருக்கு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது, அதேசமயம் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது நீதிமன்றத்தின் தனியார்மயத்திற்கு ஆதரவான தீர்ப்பாகப் பார்க்க வேண்டியுள்ளது. இது துப்புரவுப் பணிக்கு மட்டுமில்லாமல், அனைத்து பணிகளுக்குமே பொருந்தக்கூடிய தீர்ப்பாக அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது,” என்று அவர் எச்சரித்தார். எனவே, இந்த போராட்டம் தொடரத்தான் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் குறித்து
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுப் பந்தலில் அண்ணா, எம்.ஜி.ஆர். படங்கள் புதிதாக வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “இதுபற்றி அவர்களை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ள தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தான் முதலில் கருத்து கூற வேண்டும்,” என்று பதிலளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் துரைராஜ் மற்றும் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் முருகையன் ஆகியோர் உடனிருந்தனர்.