மயிலாடுதுறை: திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) கீழ், 2025-26 ஆம் ஆண்டுக்கான சம்பா (சிறப்புப் பருவம்) நெல்-II பயிருக்குக் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் (15.11.2025) விவசாயிகள் தங்கள் நெற்பயிரைக் காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Continues below advertisement

திட்ட விவரங்களும், காலக்கெடுவும்

தமிழகத்தில் 2025-26 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் சம்பா (சிறப்புப் பருவம்) நெல்-II பயிருக்குச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டத்தை அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் (AICIL - Agricultural Insurance Company of India Limited) காப்பீட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது.

 * அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகள்: தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா (சிறப்புப் பருவ நெல்-II) பயிர்க்காக 277 கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

Continues below advertisement

* கடைசி நாள்: சம்பா (சிறப்புப்) பருவத்தில் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நவம்பர் 15, 2025 ஆகும். விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் இந்தக் காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறைந்த பிரீமியம், அதிக பலன்

இயற்கை சீற்றங்கள், வெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

* காப்பீட்டுத் தொகை: ஒரு ஏக்கருக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை ரூ.36,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* விவசாயிகள் பங்கு: இதில், விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை (1.5 சதவீதம்) மட்டுமே ஆகும். அதன்படி, நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.547.50 மட்டுமே செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள பிரீமியத் தொகையை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏற்றுச் செலுத்தி, விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கின்றன.

எங்கு காப்பீடு செய்வது?

சம்பா நெல்-II (சிறப்புப் பருவம்) சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் கடன் மற்றும் கடன் பெறாத நிலைக்கு ஏற்பப் பின்வரும் இடங்களில் காப்பீடு செய்து கொள்ளலாம்.

* கடன்பெறும் விவசாயிகள்: அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களைத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்யலாம்.

 * கடன் பெறா விவசாயிகள்: பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) மூலமாகவோ அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில்” www.pmfby.gov.inநேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.

பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள்

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்

 * முன்மொழிவு விண்ணப்பம் மற்றும் பதிவு விண்ணப்பம்.

 * கிராம நிர்வாக அலுவலர் (VAO) வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல்/ இ-அடங்கல் சான்றிதழ் (பயிர் சாகுபடி செய்ததற்கான ஆதாரம்).

 * வங்கிக் கணக்குப் புத்தகத்தின் (Bank Passbook) முதல் பக்க நகல்.

 * ஆதார் அட்டை (Aadhaar Card) நகல்.

காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்திய பின், அதற்கான இரசீதை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியவை

பயிர்க் காப்பீடு செய்யும் போது, விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமம் மற்றும் பயிர் வகை ஆகியவை விண்ணப்பத்தில் சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்,  வலியுறுத்தியுள்ளார். இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி, அனைத்து விவசாயிகளும் நவம்பர் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.