மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சேத்திரபாலபுரம் கிராமத்தில் எழுந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகு விமர்சையாகவும் பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் திருப்பணிகள் சிறப்பாக நிறைவுற்றதனைத் தொடர்ந்து, ஊர் பொதுமக்களும் ஆன்மீக அன்பர்களும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழாவினை விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Continues below advertisement

மங்களகரமான யாகசாலை பூஜைகள்

கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்கோயில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு, புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திருநீறாட்டும் புனித நீர் அடங்கிய கடங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. மொத்தம் மூன்று காலங்களாக நடைபெற திட்டமிடப்பட்டிருந்த யாகசாலை பூஜைகள் மிகவும் விமரிசையாகத் தொடங்கின. முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளில் வேதம் வல்ல பட்டாச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்துகொண்டு, உலக நன்மையாண்டியும் ஊரின் செழிப்ப வேண்டியும் வேத மந்திரங்களை முழங்கினர்.  ஒவ்வொரு கால பூஜையின்போதும் சிறப்பு ஹோமங்களும், திவ்ய பிரபந்த பாராயணங்களும், நாதஸ்வர இன்னிசையும் தொடர்ந்து நடைபெற்றன.

பூர்ணாஹுதியும் புனித நீர் ஊர்வலமும்

இன்று கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் மிகக் கோலாகலமாகத் தொடங்கின. அர்ச்சகர்களின் வேத கோஷங்கள் விண்ணை எட்ட, மூன்றாம் கால பூஜையின் நிறைவாக மகா பூர்ணாஹுதி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்களுக்குத் தூப தீப ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கள வாத்தியங்கள் மற்றும் மேள தாளங்கள் அதிர, பட்டாச்சாரியார்கள் புனித நீர் நிரம்பிய கடங்களைத் தங்களது தலையில் சுமந்தவாறு, திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். பக்தர்களின் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாம கோஷங்களுக்கு இடையே புனித நீர் அடங்கிய கடங்கள் விமான நிலையை அடைந்தன.

Continues below advertisement

விமானக் கலசங்களுக்குப் புனித நீரபிஷேகம்

கோயிலின் விமானக் கோபுரத்தைச் சென்றடைந்த புனித நீர் கலசங்களுக்கு, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் வைத்துச் சிறப்புப் பூஜைகளும் மந்திர உச்சாடனைகளும் செய்யப்பட்டன. தொடர்ந்து சுப முஹூர்த்த வேளையில், கோபுரக் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது பக்தர்களிடையே மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கோபுரக் கலசங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட அதே தருணத்தில், கலசங்களின் மீது மலர்கள் தூவப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தைக் காணத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தரிசனம்

கோபுரக் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருக்கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், புனித நீரால் மகா கும்பாபிஷேகமும் செய்யப்பட்டன. பின்னர், மூலவருக்கு வண்ண மலர்களாலும் சிறப்பு ஆபரணங்களாலும் திவ்ய அலங்காரம் செய்யப்பட்டு, சோடஷ உபசாரங்களுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகப் பெருவிழாவில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழாவை முன்னிட்டு வருகை தந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.