கர்நாடகாவில் கனமழை


காவிரியில் கர்நாடகம் தண்ணீர் தர மறுத்த நிலையில் வருண பகவானின் கருணையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீரானது திறக்கப்பட்டது. அதன் பலனாக மேட்டூர் அணையில் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து கடந்த மாதம் 28 -ஆம் தேதி காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. திருச்சி முக்கொம்பிற்கு வந்த காவிரி நீரை அங்கிருந்து காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை அடுத்து சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையார் கடலில் வீணாக கலந்தது.


கடைமடைக்கு வந்த காவிரி 


இந்நிலையில் பாசன வாய்க்கால்கள் ஆறுகளில் தாமதமாக வந்த தண்ணீர் இன்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலையூர் கடையனையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமையில் பாரம்பரிய முறைப்படி காவிரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை அடுத்து கடையனையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர்பாசனம் மற்றும் கடலுக்கு திறந்து விடப்பட்டது. அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள்மலர்கள் மற்றும் நெல் விதைகளை தூவி விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்தனர்.




அழைப்பு விடுக்கப்படாத விவசாயிகள் 


கடையனையில் தண்ணீர் திறப்பில் சிறப்பிற்கும் விவசாயிகள் யாரும் அழைக்கப்படாத நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் விவசாயிகள் இல்லாமல் தண்ணீர் திறந்து, விவசாயிகளுக்கு மாற்றாக பொதுப்பணித்துறையின் கடைமடை ஊழியர்களான லஸ்கர் எனப்படும் பாசன உதவியாளர்களுக்கு பச்சை துண்டுகளை அணிவித்து லஸ்கர்களை விவசாயிகளாக உருமாற்றி நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். 




விவசாயிகள் அதிருப்தி 


பொதுவாக காலம் காலமாக தண்ணீர் திறக்கும் நிகழ்வில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் பூஜைகள் செய்து, நெல் மணிகளை தூவி தண்ணீர் திறந்துவிடும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளே லஸ்கர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து தண்ணீர் திறந்த சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இந்த கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும், மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தண்ணீர் காலதாமதமாக வந்தடைந்துள்ள அதே நேரம், முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




லஸ்கர் என்றால் இதுதான் 


பொதுப்பணித்துறையின் கடைமட்ட ஊழியர்களே லஸ்கர்கள். கரைக்காவலர் என அர்த்தம். தபேதார், தாசில்தார் போல ஆங்கிலேயர்கள் வைத்த வடமொழி பெயரே லஸ்கர் ஆகும். வாய்க்கால் பராமரிப்பில் இருந்து, வயக்கட்டுகளுக்கு முறை வைத்து தண்ணீர் விடுவது, மணல் திருடர்களை மடக்கிப் பிடிப்பது வரை பல பணிகளுக்கு இவர்கள் தான் பொறுப்புகள். இந்தக் களப்பணியாளர்களுக்கு நீர்க்கட்டி, மணியக்காரர், கொரம்பு மாணிக்கர் என ஊருக்கு ஒரு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.




“லஸ்கர் வேலை இன்னைக்கு நேத்து உருவானதில்லை. ராஜாக்கள் காலத்துல இருந்தே இருக்கு. கரிகால் சோழன் கல்லணை கட்டுன காலத்துலயே ஆறுகளை பராமரிச்சு, வயக்காடுகளுக்கு சரியா தண்ணி கட்டிவிடுறதுக்காக ஆட்களை நியமித்து. அரசரே கருவூலத்துல இருந்து நெல் அளந்து கூலி கொடுத்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்துலதான் 'லஸ்கர்'னு இதை மாற்றியுள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு 1951-ல் பொதுப்பணித்துறை செயலாளரா இருந்த மார்ட்டியூ, 3500 பேரை லஸ்கரா நியமித்தது எல்லாரையும் பணி நிரந்தரம் செய்துள்ளார். அப்புறம் 'லஸ்கர்'ங்கிற பேரை நீக்கிட்டு 'பாசன உதவியாளர்' எங்கிற பேரை வைத்துள்ளனர்.