மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரை மேம்படுத்தும் பொருட்டு விரிவான புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்த தகுதியான நபர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO - டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO - டாப்செட்கோ) ஆகியவற்றின் மூலம் பல்வேறு அரசு கடனுதவிகளை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசு, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதாரத்தில் சுயமாக காலூன்றவும் பல்வேறு நிதியுதவிகளையும் மானியங்களுடன் கூடிய கடன்களையும் ஆண்டுதோறும் டாம்கோ மற்றும் டாப்செட்கோ நிறுவனங்கள் வழியாக தொய்வின்றி வழங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டிலும் இந்த உன்னத திட்டங்களின் நன்மைகள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் சிறப்பு கடன் மனுக்கள் பெறும் முகாம்கள் (லோன் மேளா) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இச்சிறப்பு முகாம்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்ட தேதிகளில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சுறுசுறுப்பாக நடைபெறவுள்ளன.

முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை

இந்த சிறப்பு கடன் முகாம்கள் நடைபெறும் வட்டாரங்கள் மற்றும் அதற்கான விரிவான கால அட்டவணையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள முகாம்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

1.மயிலாடுதுறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்: 27.07.2026 – திங்கள் கிழமை (காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை)

2. குத்தாலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்: 28.07.2026 – செவ்வாய் கிழமை (காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை)

3. தரங்கம்பாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்: 29.07.2026 – புதன் கிழமை (காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை)

4.சீர்காழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்: 30.07.2026 – வியாழன் கிழமை (காலை 10.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை)

தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள்

இதிட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைஞர்களுக்கான கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சில குறிப்பிட்ட தகுதிகளையும் ஆவணங்களையும் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். தகுதியுடைய நபர்கள் இச்சிறப்பு முகாம்களில் நேரடியாகக் கலந்துகொண்டு விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்க வேண்டிய அத்தியாவசிய ஆவணங்களின் விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, விண்ணப்பதாரரின் 

* சாதிச்சான்று

* குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)

* இருப்பிடச் சான்று

* வருமானச் சான்று மற்றும் முறையான அடையாளச் சான்று நகல்கள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும், தாங்கள் தொடங்கவிருக்கும் தொழில் அல்லது வியாபாரம் குறித்த முழுமையான திட்ட அறிக்கை (Project Report) மற்றும் கூட்டுறவு வங்கிகள் விதிமுறைகளின்படி கோரும் இதர முக்கிய ஆவணங்களையும் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்கான கல்விக்கடன் வழிகாட்டுதல்

உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கும் பட்சத்தில், சிறப்பு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate), கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), கல்வி கட்டணங்கள் செலுத்தியதற்கான அசல் இரசீது அல்லது செலான் (Original Receipt / Challan) மற்றும் முந்தைய கல்வி மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றின் ஒளிப்பட நகல்களையும் (Xerox) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்கள் இந்த அரிய வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு வழங்கும் இந்த எளிய வட்டி வீதத்திலான கடனுதவிகள் மூலம் புதிய தொழில்களைத் தொடங்கி தங்களது பொருளாதார நிலையை உயர்த்தி, மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தனது செய்திக் குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.