மயிலாடுதுறை: சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளின் தனிப்பட்ட செயல்பாடுகளை சட்டவிரோதமாகக் கண்காணித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றம், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு எவ்வாறு தனிமனித சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த வழக்கில், மயிலாடுதுறை காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்ததோடு, பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Continues below advertisement

குற்றத்தின் பின்னணி

மயிலாடுதுறை நீடூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி புதிய பாஸ்போர்டிக்கு விண்ணப்பிக்க மயிலாடுறையில் உள்ள ஒரு தனியார் பிரவுசிங் சென்டருக்குச் சென்றுள்ளார். அங்கு பணியிலிருந்த பெரம்பூர் அகரவல்லம் சீதக்காதி நகரை சேர்ந்த இதயத்துல்லா என்பவது 28 வயதான மகன் முகமது அப்ரித் என்ற நபர், பாஸ்போர்ட் பதிவிற்கு அந்த மாணவியின் செல்போனில் "AirDroid Parental Control" என்ற ஆண்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி, அந்தச் செயலியை அந்த மாணவியின் செல்போனில் நிறுவியுள்ளார்.

கண்காணிப்பு மற்றும் சந்தேகம்

இந்தச் செயலியின் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) மற்றும் கேமரா ஆக்சஸ் (Camera Access) போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி, முகமது அப்ரித் தனது செல்போனிலிருந்தே அந்த மாணவியின் செல்போன் கேமரா மற்றும் திரை மூலம் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளை அந்த மாணவிக்குத் தெரியாமல் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த மாணவியின் செல்போனில் வந்த சந்தேகத்திற்குரிய நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் விரைவாக சார்ஜ் குறைவது போன்ற அறிகுறிகள் காரணமாக அந்த மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தான் சந்தேகித்த தகவலை அவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

காவல்துறையின் விரைவான நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை மயிலாடுதுறை உதவி ஆய்வாளர் அருண்குமார் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கைது செய்யப்பட்ட முகமது அப்ரித், "AirDroid Parental Control" என்ற செயலியை பயன்படுத்தி அந்த மாணவி மட்டுமின்றி, வேறு நான்கு நபர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளையும் தனது செல்போன் மூலம் சட்டவிரோதமாகக் கண்காணித்து வந்தது தெரியவந்துள்ளது.

குற்றவாளி கைது மற்றும் நீதிமன்றக் காவல்

விசாரணையைத் தொடர்ந்து, குற்றவாளி முகமது அப்ரித் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் தேவையற்ற மற்றும் நம்பகத்தன்மையற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்தால், தனிப்பட்ட தரவுகள் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்கள் புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போதும், பிரவுசிங் செய்யும் போதும், அறிமுகமில்லாத நபர்களிடம் செல்போன்களை கொடுக்கும் போதும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சைபர் குற்றங்களுக்கு உதவி எண்

சைபர் குற்றங்கள் தொடர்பான உதவிகளுக்கு, பொதுமக்கள் எந்த நேரத்திலும் 1930 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை, சைபர் குற்றங்களுக்கு எதிரான காவல்துறையின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதோடு, பொதுமக்கள் தங்களின் டிஜிட்டல் வாழ்க்கையில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.