தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் போற்றி வளர்க்க கூடியவர் நமது பாரத பிரதமர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் கம்பர் பற்றிய பேச்சு இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் கம்பர் தோட்டத்தில் ஏப்ரல் 6 -ம் தேதி வரை கம்பராமாயண விழா நடைபெறுகிறது.
கம்பராமாயணம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் கம்பராமாயண தொடக்க விழா நடைபெற்றது. இதில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கம்பராமாயண விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் சாஸ்த்ர நிகர்நிலை பல்கலைக்கழக இயக்குனர் சுதா சேஷய்யன் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவானது வரும் ஏப்ரல் 6 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புகைப்பட கண்காட்சி
தொடர்ந்து கம்பர் மேட்டில் இந்திய தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட்டார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு வந்து, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக தேரழுந்தூருக்கு வந்தடைந்தார்.

மத்திய அமைச்சர் பேச்சு
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கடந்த 18-ந் தேதி கம்பரை போற்றும் வகையில் விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி மத்திய அரசின் பண்பாட்டுப் பிரிவின் கீழ் செயல்படும், இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கம்பர் பிறந்த ஊராக கருதப்படும் தேரழுந்தூர் என்னும் கிராமத்திலுள்ள கம்பர்மேடு என்னும் இடத்தில் கம்பராமாயண விழாவை ஒருவார காலம் பல நிகழ்வுகள் மூலம் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பரின் சிறப்புகள்
12-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் புகழ்மிக்க புலவர்களில் ஒருவராகக் கம்பர் திகழ்ந்தார். அவர் ஸ்ரீரங்கத்தில் அறிஞர்களின் சபையில் கம்பராமாயணத்தை அரங்கேற்றினார். மேலும் அவரின் படைப்பினைப் புகழாத அறிஞர்களே இல்லை என கூறும் அளவிற்கு அவரின் படைப்பு திகழ்கின்றது. அவர் இயற்றிய இராமாயாணக்கதைகள் சோழர் காலக் கோயில்களில் சிற்பங்களாகவும், ஒவியங்களாகவும் சித்தரிக்கபட்டுள்ளன.

இந்தியத் தொல்லியல் துறை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையம் இணைந்து ஒரு வார விழாவாக கொண்டாடப்படும் இந்நிகழ்வானது கம்பனின் பார்வையில் ராமாயண சிற்பக் காட்சி என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியுடன் கம்பர்மேடு தொல்லியல் இடத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியானது தென் இந்தியாவில் ராமாயண பாரம்பரியத்தை உணர்த்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது; நவராத்திரி ராமநவமி தொடங்க உள்ள நிலையில் கம்பர் பிறந்த இந்த இடத்திற்கு வந்தது எனக்கு ஒரு புனித யாத்திரை வந்தது போல் இருக்கிறது. என்னை பொருத்தவரை இங்கு வருவது இரண்டாவது முறை. இது புனிதமான ஸ்தலம் கம்பன் இங்கு தோன்றி புனிதமான ராம காதையை நமக்கெல்லாம் வழங்கினார். எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது, எனது பள்ளி பருவத்தில் பாட்னாவில் பயின்று கொண்டிருக்கும்போது கம்பராமாயணம் குறித்து கேள்விப்பட்டதுண்டு, உயர் கல்வி பயிலும் பொழுது கம்பர் பிறந்த இடத்திற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டதுண்டு, அது இரண்டாவது முறையாக நிறைவேறி உள்ளது.

துளசிதாசர் பற்றி எங்கும் பேச்சு
உத்தரப்பிரதேசம், பீகார், போன்ற இந்தி பேசும் மாநிலங்களுக்கு சென்றால் துளசிதாசர் பற்றி பேச்சு எங்கும் நிலவுகிறது. ஆனால், தமிழகத்தில் கம்பர் பற்றிய பேச்சு இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர் ஏதோ ஒரு இலக்கியப் படைப்பை படைத்தார் என்பது மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல மொழிகள் பேசுபவர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதற்கு கம்பனின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழர்களின் கலாச்சாரத்திற்கு வடிவம் கொடுத்தது கம்பராமாயணம்
நமது கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு படைப்பாளி என்று கூட நான் கருதுகிறேன். கம்பர் எழுதிய கம்பராமாயணம் எளிய நடைமுறையில் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் எழுதினார். தற்பொழுது நடைபெற்ற தெருக்கூத்து என்பது வட மாநிலங்களில் ராமலீலா என்ற பெயரில் நடக்கிறது. ராமர் பிறந்தது முதல் பட்டாபிஷேகம் வரை இந்த தெருக்கூத்து வாயிலாக நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்த்து காட்டியது பாராட்டுக்குரியது. கம்பராமாயணம் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு ஒரு வடிவம் கொடுத்துள்ளது.

மோடியை போல் யாரும் இல்லை
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் செய்தது போல இதுவரை யாரும் செய்ததில்லை. இவர் சிங்கப்பூர், மலேசியா, பாஸ்டன் உள்ளிட்ட மேலை நாடுகளில் திருவள்ளுவர் இயற்கை அமைத்து தமிழை கொண்டு சேர்த்துள்ளார். நமது நாடாளுமன்றத்தில் செங்கோலை செங்கோலை கொண்டு சேர்த்துள்ளார். காசியிலே காசி தமிழ் சங்கமம் குஜராத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் என தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் போற்றி வளர்க்க கூடியவர் நமது பாரத பிரதமர். மேலும் இவர் கம்பரின் தீவிர பக்தரும் ஆவார்.
ஜெய் பாரதுடன் முடித்த ஆளுநரின் பேச்சு
கம்பராமாயணத்தை மறுக்க முடியாது மறக்கவும் முடியாது கம்பர் கம்பராமாயணத்தை தமிழ் கலாச்சாரத்தில் இருந்து பிரிக்க முடியாது. அதற்கு புத்தூயிர் ஊட்டும் வகையில் நாம் இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் நமக்கு முன்பாக கலை வடிவத்தில் தெருக்கூத்து கலைஞர்களால் போற்றப்பட்ட இந்த கம்பராமாயணத்தை இன்னும் பன்மடங்கு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பள்ளி கல்லூரிகளில் கம்ப ராமாயணத்தை வைத்து பல போட்டிகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம். தமிழ் கலாச்சாரத்தை வளம் குறைய விடக்கூடாது. அடுத்த சில நாட்கள் இந்த நிகழ்ச்சி இன்னும் சிறும் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இருந்தபோதிலும் அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை இதோடு சீரும் சிறப்புமாக நடத்தி முடிக்க வேண்டும். ஜெய் பாரத் என்று கூறி உரையை முடித்தார்.






















