மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சீர்காழி தாலுக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்ததை அடுத்து பல மணி நேரம் கடந்தும் மின் வினியோகம் தடைபட்டுள்ளது.
வாட்டி வதைத்த வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் மிக மோசமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எச்சரித்த வானிலை மையம்
இந்நிலையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மேலும், நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மயிலாடுதுறையில் சூறாவளி காற்று
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை நேற்றிரவு பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் சூறை காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான் ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலும் நேற்றிரவு பலத்த சூறை காற்றுடன் கனமழையானது பெய்தது.
குறிப்பாக சீர்காழி பகுதியில் சூறாவளி காற்றுடன் அதிக மழையானது பதிவானது. இதனால் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
மின் வினியோகம் பாதிப்பு
தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து, மேலும் சூறாவளி காற்றால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கலும் சாய்ந்ததன, மின்கம்பிகள் அறுத்தன. இதனால் கடந்த 16 மணி நேரம் கடந்தும் பல இடங்களில் மின் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர். மரங்கள், கிளைகளை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் வழங்கிட இரவை கடந்தும் தற்போது வரை மின்வாரிய ஊழியர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த பெயர்ப்பலகைகள்
மேலும் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், பல்வேறு பகுதிகளில் மரங்களும் சாலைகளின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் விழுந்தும் சேதம் ஏற்பட்டுள்ளது. நகரில் பல வர்த்தக நிறுவனங்களின் பெயர் பதாகைகள் காற்றில் சாலையில் தூக்கி வீசப்பட்டது. நள்ளிரவில் மழையின் தாக்கம் குறைந்து காற்று மற்றும் இடி மின்னலுடன் பரவலாக சாரல் மழை தொடர்ந்தது.
விவசாயம் பாதிப்பு
இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவளாகம், காத்திருப்பு, செம்பதனிருப்பு, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. பத்து மாத பயிரான இந்த வாழை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது அடித்த பலத்த சூராவளி காற்று மற்றும் கனமழையால் வாழை முற்றிலும் அழிவை சந்தித்துள்ளது.
அதிகபட்ச மழை பொழிவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 24.40 மி.மீ, மணல்மேடில் 37.00 மி.மீ, கொள்ளிடத்தில் 60.00 மி.மீ, செம்பனார்கோயிலில் 34.80 மி.மீ மழையும் அதிகப்படியாக சீர்காழியில் 84.60 மி.மீ மழையும், குறைந்த பட்சமாக தரங்கம்பாடியில் 3.00 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.