டிட்வா புயல் மற்றும் கனமழையால் மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த். அதேபோல, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் அம்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மதியம் விடுமுறை அறிவித்துள்ளனர்.

Continues below advertisement

அதி கனமழை எச்சரிக்கை 

புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாகமயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 28) மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்களின் அறிவுறுத்தல்கள் 

கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Continues below advertisement

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வங்ககடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் தாங்கள் அருந்தும் குடிநீரை காய்ச்சி வடிகட்டிய பின்னர் பருகவும், சூடான உணவுகளை மட்டுமே உண்ணவும், தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வீட்டில் மின் விளக்குகளை கவனமுடன் கையாளவும், உடைந்த மின்சாதன பொருட்களை உடனே மாற்றவும், வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பிகள், மின் பகிர்வுபெட்டிகள் அருகே செல்லவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்து இருந்தால் மின்வாரியத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

இடி மின்னல் ஏற்படும்போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தவேண்டாம் எனவும் பச்சை மரங்களுக்கு அருகில் நிற்கவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நீர் நிலைகளின் அருகில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்தல் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட மழை பாதிப்பு குறித்த புகார் எண்கள்

மழை தொடர்பான சேதங்கள், நீர் தேங்குதல், மின் கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.பொதுமக்கள் தங்களது புகார்களைப் பின்வரும் எண்களுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்:

 * மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண்: 1077 (இலவச அழைப்பு)

 * நிலையான தொலைபேசி எண்: 04364 - 222588

பொதுமக்கள் அனைவரும் அரசு அறிவிப்புகளுக்குக் கவனம் செலுத்தி, அவசியமானால் மட்டுமே வெளியே செல்லுமாறும், அத்தியாவசியப் பொருட்களுடன் தயாராக இருக்கும்படியும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட உதவி எண்கள்

இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை அவசரகால உதவி எண் 1077, 04366-226623 மற்றும் வாட்ஸ்அப் எண்: 9043989192 மற்றும் 9345640279 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.