விருதுநகர், விஸ்வநத்தம் ஊராட்சி, கவிதா நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை கடந்த மே 12ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசின் கொள்கை அறிவிப்பின்படி அகற்றக் கோரிய வழக்கு.

Continues below advertisement

டாஸ்மாக் கடை

விருதுநகர் மாவட்டம் சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ஞானதாஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "சிவகாசி, விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கவிதா நகரில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்படக்கூடாது. கல்வி நிறுவனங்கள், கோவில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு தள்ளியே மதுக்கடைகள் அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் கவிதா நகரில் தூர விதிகளை மீறியே மது கடை அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த மே 12ஆம் தேதி தூர விதிகளை மீறி உள்ள 717 டாஸ்மாக் கடைகள் உடனடியாக அடைக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு

ஆகவே, "விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கவிதா நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை கடந்த மே 12ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசின் கொள்கை அறிவிப்பின்படி அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, "மனுதாரர் குறிப்பிடும் டாஸ்மாக் கடை தூர விதிகளை மீறி உள்ளதா? அவ்வாறெனில் விதிப்படி நடவடிக்கை எடுக்கலாமே" என தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில், "இவ்வாறு தூர விதிகளை மீறி உள்ள 717 மதுக்கடைகள் அகற்றப்படும் என முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், "மனுதாரர் குறிப்பிடும் மதுக்கடை முதல்வர் மூடுவதாக அறிவிப்பை வெளியிட்ட 717 கடைகளில் ஒன்றா? என்பதை உறுதி செய்வதோடு, தூர விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.