வீரப்பனுக்கு மணிமண்டபம் தமிழக அரசு சார்பாக அமைத்து கொடுக்க வேண்டும் என அவரின் மனைவி முத்துலட்சுமி அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆத்தூர் ஒன்றிய தலைவர் வேளாங்கண்ணி - ஆலிஸ் மேரி அவர்களின் புதல்வர்கள் பால் எபினேசர் ஆல் மேத்யூஸ் இருவரின் முதல் திரு விருந்து காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் முத்துலட்சுமி வீரப்பன், மாநில அமைப்பு குழு உறுப்பினர் வடலூர் ஜோதி குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினார்கள்.
இவ்விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியிடம் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, மறைந்த தனது கணவர் வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் தமிழக அரசால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் . அவரிடம் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, வன்னிய சமுதாய மக்களை மேம்படுத்து வண்ணம் அவர்களுக்கு திமுகவில் அமைச்சர் பதவி , கட்சி பதவி என பல்வேறு பொறுப்புகளை வழங்கி அழகு பார்த்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு என்று கூறினார். இப்போதும் கழகத் தலைவர். திராவிட மாடல் ஆட்சி நாயகன் கழக தலைவர் மு .க. ஸ்டாலின் அவர்கள் வன்னிய சமுதாயத்தினருக்கு உள்ள மரியாதையை கொடுத்து அவர்களை மேம்படுத்தி வருகிறார். என்றதோடு, உங்களின் கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார்.
அதன் பின்னர் விழாவில் பேசிய முத்துலட்சுமி வீரப்பன் இன்று பலர் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம் என கனவு கண்டு அரசியல் செய்கிறார்கள் நடிகைகளை கட்டிப்பிடித்து ஆடி பணம் சம்பாதித்து விட்டு இன்று நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என மார்தட்டுகிறார்கள். அவர்களுக்கு நாம் இடமளிக்கக் கூடாது. தமிழகத்திற்கு வட மாநிலத்தவர்கள் அதிகம் வந்து தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்து வருகிறார்கள். அதனால் தமிழர்கள் வேலை வாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை உருவாகி வருகிறது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இலங்கையில் எப்படி தமிழர்களை அழித்து சிங்களர்கள் ஆட்சி செய்கிறார்களோ அதுபோல மத்தியில ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை அழித்து தமிழ்நாட்டில்ஆட்சி செய்ய நினைக்கிறது எனக்கூறினார்.