தேனி மாவட்டம், முத்துதேன்பட்டி வீட்டுவசதி சமுதாய கூடத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்  பல்வேறு துறைகளின் சார்பில் 2,813 பயனாளிகளுக்கு ரூ.21.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இவ்விழாவில் உதய நிதி ஸ்டாலின் பேசியதாவது: 


''இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலமும் செயல்படுத்திடாத வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 மகளிருக்கு டெபிட் கார்டுகளை வழங்குவதில் மகிழ்ச்சி. தமிழகம் முழுவதும், 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை. தேனியில் மட்டும் 2 லட்சத்து 4 ஆயிரம் பயனாளிகள் உள்ளனர்.




இதுவரை நமது அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களிலேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். தமிழ்நாட்டை பின்பற்றி, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தப்படுகிற போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கபடாதவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். மேலும், உங்கள் மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர் – சார் ஆட்சியர் – வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளோம்.




மகளிர் மட்டுமன்றி திருநங்கையர் – மாற்றுத்திறனாளிகளும் இன்றைக்கு இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல் வடிவம் கொடுத்து வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞரும் அதை செய்தார். கலைஞரைத் தொடர்ந்து முதலமைச்சரும், மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  


அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக முடக்கப்படும் பெண்களை முன்னேற்றுவதற்கான நமது திராவிட மாடல் திட்டங்கள். நமது முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான், தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று 30 வருடங்களுக்கு முன்பே இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத்திலே உரிமை கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் நமது திமுக அரசு கொண்டு வந்த சட்டம்தான்.




ஒரு பெண் பொருளாதார ரீதியாக முதலில் தன் தந்தை, கணவன், மகன் என ஆண்களையே எதிர்பார்க்க வேண்டும். இந்த நிலைமை மாறி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டுமானால் அவர்களும் தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்க வேண்டும், தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலையிலே அமர வேண்டும். எனவேதான், நம்முடைய திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. 


படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிக முக்கியமானது. இத்திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.    இப்போது, உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மேயர், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர்,  ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளில் 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர்.




இந்த சாதனையை நடத்திக் காட்டியது நம் திராவிட மாடல் அரசு. பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக இருப்பதுதான் பெண்ணுரிமைக்கான அடித்தளம். இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தந்தை பெரியார் சொன்னதுதான். மகளிர் நீங்கள் அனைவரும் முற்போக்காகவும் பகுத்தறிவுடனும் சிந்திக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மகளிர் அதிகம் படிக்க வேண்டும். ஆண்களை விட பெண்கள்தான் தங்களுடைய வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பப் பராமரிப்புக்காக செலவிடுகிறார்கள்.


எனவே, பொருளாதாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’


இவ்வாறு உதயநிதி பேசினார்.