திருச்சி, முசிறி வட்டம், புலிவலம் மற்றும் பெரங்குலம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்னர் தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள கோரிய வழக்கு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி முசிறி வட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திருச்சியை சேர்ந்த பெருமாள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு. அதில், "திருச்சி, முசிறி வட்டம், புலிவலம் மற்றும் பெரங்குலம் கிராமம் திருச்சி முதல் துறையூர் செல்லும் தேசியநெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

 

திருச்சி முதல் துறையூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பல ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளின் காரணமாக சாலைகள் சிறிதாகி விட்டதால் இங்கு பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இங்கு சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்னர் தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, திருச்சி, முசிறி வட்டம், புலிவலம் மற்றும் பெரங்குலம் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்னர் தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இந்த சாலையில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வழக்கு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி முசிறி வட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 





மற்றொரு வழக்கு
















 

மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் பேராயர் அந்தோணி பாப்புசாமி குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

 

வேடசந்தூர் சேர்ந்த மரிய செல்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக உள்ளார். மக்கள் பேராயர் என அனைத்து மதத்தினராலும் புகழப்பட்டவர். 

 

இந்த நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் அவர் மீதும் மேலும் சிலர் மீதும் அவதூறு பரப்பும் வகையில் கொடைக்கானல்  அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் பல தகாத செயல்களில் ஈடுபட்டர்  என வார இதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

 

இது அவரது மரியாதையை சீர்குலைக்கும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது எனவே இந்த  வார இதழ், அதில் பணியாற்றும் நிருபர்கள் மீது அவதூறு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டு  சம்பந்தமாக கொடைக்கானல் போலீசார் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 

அதன் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து அவதூறாக செய்தி வெளியிட்ட நபர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.