திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம் ,பழனி, வேடசந்தூர் ,வடமதுரை, சாணார்பட்டி ,நத்தம், தொப்பம்பட்டி உட்பட பல இடங்களில் பூக்கள் விளைகிறது. பூக்களுக்கு காலம் என்பது இங்கு இல்லை. அனைத்து மாதங்களிலும் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பூக்களிலே பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.
இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை , மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பூக்கள் விளைந்து திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட போதும் விலையில்லாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு நல்ல மழை பெய்து பூக்கள் விளைச்சல் நன்றாக உள்ளது .குறிப்பாக செண்டுமல்லி, வாடாமல்லி, மரிக்கொழுந்து, மல்லிகை ,கனகாம்பரம், பிச்சிப்பூ, முல்லைப்பூ, காக்கரட்டான், ஜாதிமல்லி ,ரோஜா, மருது, அரளிப்பூ ஆகிய பூக்கள் விளைச்சல் அதிகமாகத்தான் உள்ளது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் பூக்களை அனுப்ப முடியாமல் விவசாயிகளும், வியாபாரிகளும் திணறி வருகின்றனர், இதனால் விளைந்தும் விலை இல்லாததால் பல நேரங்களில் பூக்களை செடிகளில் பறிக்காமலே விட்டுவிடுகின்றனர்.
மேலும் ஊரடங்கு காரணமாக கோயில் விழா, முகூர்த்தம், விசேஷ நாட்கள் எதுவும் வராததால் பூக்களின் விலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து வேதனையில் அவதிப்பட்டு வந்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடுகள் மற்றும் கோவில்கள் தொடர்ந்து மூடப்படுவதால் பூக்களின் விலை ஏற்றம் இல்லாமல் இறக்கமாகவே காணப்படுகிறது.
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரளவு திருமண நிகழ்ச்சிகள் நடப்பதாலும், இன்றைய பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.
இன்றைய பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு,
மல்லிகை பூ -ரூ 450 ,
முல்லை பூ - ரூ. 300,
கனகாம்பரம் - ரூ.600,
ஜாதிப் பூ - ரூ.200,
செவ்வந்தி - ரூ.80,
சம்பங்கி - ரூ.140,
அரலி - ரூ.250,
கோழி கொண்டை - ரூ.80,
செண்டு மல்லி - ரூ.20,
ரோஸ் - ரூ.60க்கும்
விற்பனை செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற