ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய வழக்கில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்த பெரியசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


அதில், "ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றிலும் 5000 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் காணப்படுகிறது இதன் மூலம் எங்கள் ஊர் மக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பனைவெல்லம், பதநீர், பனங்கற்கண்டு போன்ற பனைமரம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும் இதுவே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.


இந்நிலையில் சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாக எங்கள் பகுதியில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு ரகசியமாக முயற்சிக்கின்றனர். மேலும் சில பனை மரங்களை வெட்டியும் உள்ளனர்.எனவே, பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரங்களை எந்தவொரு நபரும் எந்த வகையிலும் வெட்டுவதையும் அல்லது அகற்றுவதையும் தடுக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ராஜா மற்றும் மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது அரசு தரப்பில், சூரிய மின் சக்தி அமைப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று 344 பனை மரங்களை வெட்டியுள்ளனர். இதனை அறிந்து அவர்களிடம் இருந்து வெட்டிய பனை மரங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழகம் முழுவதும் பனை மரங்களை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.