தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ,சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக மிகவும் எளிமையாக நடைபெற்ற பங்குனிப் பெருவிழா இந்த ஆண்டு கடந்த மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த மாசி மாதம் 26ஆம் நாள் 10.03.2022 வியாழக் கிழமை காலை ரிஷப லக்கனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழா நாள்தோறும் சுவாமி உற்சவம் திருவீதி உலா காலையிலும், மாலையிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவம் திருவீதி உலாவில் சுவாமி கல்யாணபசுபதீஸ்வரர் நந்தி வாகனத்திலும், பூத வாகனத்திலும், திருக்கயிலாய வாகனத்தில், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஜவகர் பஜார், மாரியம்மன் கோவில் தெரு, 5 ரோடு, வா உ சி தெரு, வஞ்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயம் குடி புகுவார்.
அதைத்தொடர்ந்து பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை அப்பி பாளையத்திலிருந்து சுவாமி கல்யாண வெங்கட்ரமண சுவாமி மற்றும் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர். அதன்பிறகு மாப்பிள்ளை அழைப்பு, பெண் வீட்டார் அழைப்பு உள்ளிட்ட திருமண நிகழ்ச்சிக்கு முன்பாக நடைபெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று, இன்று காலை பத்து முப்பது மணிக்கு மேல் பதினொன்று முப்பது மணிக்குள் ரிஷப லக்னத்தில் ஆலய மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்திலிருந்து சுவாமி திருக்கோயிலை வலம் வந்த பிறகு ஆலய மண்டபத்தில் மணக்கோலத்தில் சுவாமியே அமரச் செய்தனர். பின்னர் ஆலயத்தின் தலைமை சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடைபெற்ற பிறகு, சுவாமிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சிக்கு பிறகு குறித்த நேரத்தில் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு பால், பழம் கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று மொய் வைக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உள்ளிட்ட தெய்வங்களுக்கு தூப தீபங்கள் காட்டி, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்களுடன் பிரசாதமும் வழங்கப்பட்டது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்குனி பெருந்திருவிழா திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் ,திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.