2019-ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியிலிருந்து, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட நவாஸ்கனி 4 லட்சத்து, 7 ஆயிரத்து 434 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் 2 லட்சத்து 94 ஆயிரத்து 748 வாக்குகளை பெற்று இரண்டாவது இடம் பெற்றார். இவரது சொந்த ஊரான குருவாடி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களின் பூர்வீக நிலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் துணையோடு அபகரிக்க முயல்வதாக மதுரை ஐஜி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட குருவாடி அருகேயுள்ள கீழகுருவாடி கிராமத்தில் ராஜகருங்கு என்பவரது மகளான லட்சுமி என்பவருக்கு சொந்தமான பூர்விக நிலமான 47செண்ட் நிலத்தினை அதே கிராமத்தில் வசிக்கும் பாண்டி மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் நவாஸ் கனியின் தூண்டுதலின் பேரில் அபகரிக்க முயல்வதாகவும், கடந்த 12ஆம் தேதி தங்களது நிலத்தில் கற்களை நட்டுவைத்ததாகவும் அதனை அகற்ற முயன்றபோது பெருநாழி காவல்துறையினர் தங்களின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என கூறி லெட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரையிலுள்ள தென்மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த விவகாரத்தில் தங்களது நிலத்தை குறைந்த விலையில் பெறுவதற்காக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
கல்வி அறக்கட்டளை மூலம், அவர் சார்ந்த ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மூலம் ஆண்டுதோறும் ஊக்கப்படுத்தி வரும் நவாஸ் கனி மீது நில மோசடிக்கு துணை போவதாக புகார் எழுந்துள்ளது தொகுதி மக்களிடையேயும் அவரது சொந்த ஊர் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி முழுக்க கிராமப்புறங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் சென்றடைவதில்லை என்னும் குடிநீர் பிரச்சினை, இலங்கை கடற்படையால் இன்னல்களுக்கு ஆளாகி வரும் மீனவர்களின் பிரச்சனை, பாசனத்திற்காக வைகையிலிருந்து திறக்கப்படும் நீர் பற்றாக்குறை ஏற்படும் விவசாயிகள் பிரச்சனை, உற்பத்தி இருந்தும் உரிய கருப்பட்டிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்னும் பனை தொழிலாளர்களின் தேவைகள் என எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ்கனி தான் பிறந்த ஊரில் உடன் வசிக்கும் வசிக்கும் கிராம மக்களின் நிலத்தை அடியாட்களை ஏவி விட்டு அபகரிக்க நினைப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அவர் முறையான பதில் அளிக்க வேண்டும் என அனைவர் மத்தியிலும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime : 2.50 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சம் மதுரையில் பறிமுதல்