வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணையின்  நீர் மட்டம் உயர தொடங்கியதையடுத்து.  அணையிலிருந்து தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.




மஞ்சளார் அணையின் மொத்த  நீர் மட்டம் 57 அடியில் 55 அடியை எட்டியது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் படி மஞ்சளார் அணையில் இருந்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதில் 3,386 ஏக்கர் பழைய ஆயக்கட்டிற்க்கு 60 கன அடியும், புதிய ஆயகட்டில் உள்ள 1,873 ஏக்கர் நிலத்திற்கு 40 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.




அணையில் பாசனத்திற்கான நீரை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  திறந்து வைத்து  மலர் நவதானியங்களை தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் இருப்பை கணக்கில் கொண்டு 135 நாட்களுக்கு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமுல் படுத்தப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நீர் மட்டம் 54.80 (57) அடியாக உள்ளது.  நீர் திறப்பானது 100 கன அடியாக உள்ளது.




இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பாசன வசதி பெரும்  2,865 ஏக்கர் நிலங்களில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து பாசனத்திற்கு  30 கன அடி நீர் திறக்கப்பட்டது.  இந்த நீர் திறப்பால் பெரியகுளம், மேல்மங்களம், லெட்சுமிபுரம், தாமரைக்குளம்,  பகுதியில் உள்ள நன்செய் நிலங்களான 1,825 ஏக்கரும் புதிய புன்செய் பாசனமான 1,040 ஏக்கரி நிலங்கள் பயன்படும் வகையிலும்  நீர் திறக்கப்பட்டது.  52 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடியும், அடுத்த முறை பாசனத்தின்படி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.



பாசனத்திற்கான நீரை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அணையின் இன்றைய நீர் மட்டம்  126.28 (126.28) அடியாகவும் உள்ளது. நீர் திறப்பானது 30 கன அடியாக உள்ளது. நீரை சிக்கனமாக பயண்படுத்தி அதிக மகசூல் அடைய விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.