தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டுமனையை அளவீடு செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்து கைது செய்தனர். கூடலூரை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் முரளி என்பவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். அதே ஊரில் அவருடைய தாய் முத்துகருப்பாயி பெயரில் காலி வீட்டுமனை உள்ளது.




அந்த வீட்டுமனையை அளவீடு செய்து கொடுப்பதற்காக முரளி,ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் கூடலூர் பிர்கா சர்வேயர் அலுவலகத்துக்கு சென்றது. ஆனால், அவருக்கு உரிய நேரத்தில் அளவீடு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து முரளி, பிர்கா சர்வேயர் அலுவலகத்துக்கு சென்று தனது தாயார் பெயரில் உள்ள வீட்டுமனையை அளவீடு செய்து கொடுப்பது தொடர்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விவரத்தை தெரிவித்தார். அப்போது அங்கு பணியில் இருந்த சர்வேயர் (நில அளவையர்) மணிகண்டன் (53) நிலம் அளவீடு பணியை செய்து கொடுக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். இதனால் முரளியும் பணம் கொண்டு வந்து கொடுப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டார். பின்னர் முரளி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு சென்று இதுதொடர்பாக புகார் கொடுத்தார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சர்வேயரை காத்திருந்து பிடிக்க முடிவு செய்தனர்.




அதற்காக ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் முரளியிடம் நேற்று முன்தினம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட முரளி, மணிகண்டனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கொண்டு வருவதாக கூறினார். அப்போது அவர் கம்பத்துக்கு லஞ்ச பணத்தை கொண்டு வருமாறு கூறினார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் முரளி அந்த பணத்துடன் கம்பம் வடக்கு  காவல் நிலையம் அருகில் சென்று காத்திருந்தார். அங்கு வந்த மணிகண்டனிடம் ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார்.அப்போது அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிகண்டனை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.


பின்னர் சர்வேயர் மணிகண்டனை கைது செய்து அவரை தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர், தேனி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டுமனையை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்ட சம்பவம் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண