திண்டுக்கல் பாரதிபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (46).  இவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து அவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் செல்வி வசித்து வந்தார். ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில ஆண்டுகளாக செல்வி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். அங்கிருந்தபடியே ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவர் பணிக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் செல்வி வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில். உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பூஜை அறையில், ரத்த வெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மர்ம நபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.




இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியவர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 10ஆம்  தேதியன்று, தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனை ஊழியர் ராமச்சந்திரபிரபு (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர். 




விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர், சென்ற 11ஆம் தேதி உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராமச்சந்திரபிரபு மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரபிரபு குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 




கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனைக்கு இடமாறுதல் ஆகினர். ஆனால் அவர்களுக்கிடையேயான தொடர்பு நீடித்துள்ளது. செல்வியிடம் கடனாக கொடுத்த பணத்தை தரும்படி ராமச்சந்திரபிரபு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. 


சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் செல்வியின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்த காட்சி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அப்போது செல்விக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் செல்வியை அவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். கொலை நடந்த வீட்டில் பதிவான கைரேகையும், ராமச்சந்திரபிரபுவின் கைரேகையும் ஒத்து போனது. மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை ராமச்சந்திரபிரபு எடுத்து சென்றுள்ளார். அதனை பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அவர் அடகு வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்து நர்சு செல்வியை கொலை செய்தது, ராமச்சந்திரபிரபு தான் என்பதை போலிசார் உறுதிசெய்துள்ளனர்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண