130 ஆண்டுகள்! பென்னிகுவிக்கின் நினைவைப் போற்றி விவசாயிகள் கொண்டாட்டம்! தண்ணீர் திறப்பு நாள் கொண்டாட்டம்!
1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தமிழகத்திற்கு முதல் முதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நாளை முன்னிட்டு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் மரியாதை செலுத்தி முல்லைப் பெரியாற்றில் மலர் தூவி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
தென்மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிச்செட்டிபட்டி வரையில் சுமார் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது.
முல்லை பெரியாற்று நீரைக்கொண்டு விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கமாக உள்ளது. தென் மாவட்ட மக்களின் குடி நீரின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் கட்டினார். தென்தமிழக மக்களின் வாழ்க்கை செழிக்கும் வண்ணமாக மாற்றிய பொறியாளர் ஜான் பென்னிகுவிக் அவர்களை மனித கடவுளாக இப்பகுதி மக்கள் பாவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே 1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தமிழகத்திற்கு முதல் முதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நாளை தென்மாவட்ட மக்கள் ஒரு மிக முக்கிய நாளாகக் கருதி வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இன்றுடன் 130 ஆண்டுகள் ஆனதை அடுத்து தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவரது மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர், முல்லைப் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர், முல்லை சாரல் விவசாய சங்கத்தினர் என விவசாயிகளும், அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் என அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் முல்லைப்பெரியாறு அணை கட்டும்பொழுது உயிர் நீத்தவர்களுக்கு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து முல்லை பெரியாற்றில் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் சாலையில் சென்ற பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்கள் புகழ் நீடூழி வாழவேண்டும் என்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.





















