போக்ஸோ வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற குற்றவாளி  சில நாட்களுக்கு முன்பு தேனி நீதிமன்ற அருகே வழக்கு விசாரணைக்காக போலீசாருடன் நின்றுகொண்டிருந்தபோது தப்பி ஓடினார். இந்த நிலையில் நேற்று போடி நாயக்கனூர் அருகே தப்பி ஓடிய குற்றவாளி நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.




தேனி மாவட்டம் கம்பம் கன்னிமார் கோவில் தெருவை சார்ந்தவர் விஜயகுமார்(24). தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்த விஜயகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேனி மாவட்டம் கம்பத்தில் 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் கம்பம் பகுதியில் உள்ள 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சியில் ஈடுபட்டதாக புதிய வழக்கும் சேர்ந்து கொண்டது. இரண்டு வழக்குகளுக்காகவும் கம்பம் காவல்துறையினர் தலைமறைவாக சுற்றி திரிந்த விஜயகுமாரை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.




கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் பகுதியில் காவல்துறையினர் ஆற்றைக் கடந்து விஜயகுமார் இருப்பதாக தகவல் அறிந்து தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது, காவல்துறையினருக்கு வழிகாட்டியாக உடன் சென்ற நபர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம்  நிகழ்ந்தது. இந்நிலையில் காவல்துறையினரிடம் பிடிபட்ட விஜயகுமாருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி மதுரை தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு  80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த வழக்கிற்கான விசாரணைக்காக தேனி லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு விஜயகுமாரை ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினர் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.




மேலும் நீதிமன்ற விசாரணை முடிந்ததும் போக்சோ குற்றவாளியான  விஜயகுமார்  டீக்கடை அருகே டீ அருந்தும் பொழுது காவல்துறையினரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.  தப்பிச்சென்ற விஜயகுமாரை தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். விஜயகுமார் தப்பி சென்றது குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில விஜயகுமார் போடிநாயக்கனூர் புதூர் வலசைத்துறை பகுதியில் உள்ள ரயில்வே லைன் பகுதியில்  சுற்றித் திரிவதாக போடிநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிய  வந்த நிலையில் போடிநாயக்கனூர் டிஎஸ்பி பெரியசாமி தலைமையிலான சிறப்பு தனிப்பிரிவு காவல்துறையினர் குற்றவாளி விஜயகுமாரை இரவு சுமார் 12 மணியளவில் கைது செய்தனர்.


இதுகுறித்து தேனி மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மதுக்குமாரி வசம்  தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் போடிநாயக்கனூர் ஊரக காவல் நிலையம் வந்து குற்றவாளி கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார் . மேலும் கைது செய்யப்பட்ட விஜயகுமாரை மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி  சிறையில் அடைப்பது குறித்து தேனி மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.