தேனி உத்தமபாளையம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் வழக்கில் ஆஜராக மத்திய அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதிமுக பொதுச்செயலாளார் வைகோ கடந்த 2015ல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு பொட்டிபுரம் பகுதி மலையில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த மலைப்பகுதி கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மதிகெட்டான்சோலை தேசியப் பூங்கா முதல் பெரியாறு வரையிலான புலிகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது. சுரங்கம் தோண்டுவதாலோ பாறைகளைப் பெயர்த்தெடுப்பதாலோ அந்தப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும், புலிகள் வழித்தடத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என இந்த ஆய்வகத்தின் திட்ட இயக்குநர் கூறுகிறார். ஆனால் சுற்று சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதோடு வன பகுதியில் உள்ள வன உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.


எனவே, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு  தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிபதிகள் மகாதேவன்,  சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் வழக்கில் ஆஜராக மத்திய அரசுத்தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


 




மற்றொரு வழக்கு


கோயில் விவசாய இடத்தில் எவ்வாறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி 


இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டிட ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு குறித்து திருநெல்வேலியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்துஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்தில் அருள்மிகு முப்பிடஆதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தில் தென்னம் தோப்பு உள்ளது. இந்த இடத்தில் தனி நபர்கள் குடிசைகள் அமைத்து தங்கி வந்தனர். தற்போது இந்த இடத்தில் கான்கிரீட் கட்டிடம் அமைத்துள்ளனர்.


கோயில் இடமான இந்த இடம் விவசாயத்திற்கான வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தனிநபர்கள் கான்கிரீட் கட்டிடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இந்து அறநிலையத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு முப்பிடஆதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கான்கிரீட் கட்டிட ஆக்கிரமிப்பை அகற்றி பழைய நிலைக்கு கொண்டு வரக் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில் விவசாய இடத்தில் எவ்வாறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பி வழக்கு குறித்து திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.