தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் கடந்த 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக அதை பார்த்த விவசாயி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேலியில் சிக்கியிருந்த இரண்டு வயது சிறுத்தையை காப்பாற்ற முயன்ற போது அது தானாகவே வேலியில் இருந்து தப்பி ஓடியதாகவும், தப்பி செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பி சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர், சிறுத்தை தாக்கியதில் மகேந்திரனின் இடது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.
தப்பி சென்ற சிறுத்தை அதற்கு மறுநாளே தப்பிய இடத்தில் உள்ள அதே வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அங்கிருந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையை மீட்டெடுத்து கால்நடை மருத்துவர்களே வரவழைக்கப்பட்டு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தையை எரித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மின்வேலியில் சிக்கி தப்பிய சிறுத்தை மறுநாளில் அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்க சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலர் விரிவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கையும் விட்டிருந்தனர். சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்த இடம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சிறுத்தை உயிர் இழந்த சம்பவத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது சிறையில் அடைத்துள்ளனர்.
தோட்டத்தின் உரிமையாளரான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்யாமல் அதில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை வேளையில் சிக்கி இருந்த பகுதி மற்றும் சிறுத்தையை பிரயோத பரிசோதனை செய்து எரிக்கப்பட்ட இடம் உள்ளவற்றை நேரில் பார்வையிட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகையில், வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து ஒத்துக் கொள்ள வைத்ததாகவும், இது மனித உரிமை மீறல் என்றும் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
சிறுத்தை பலியான விசயத்தில் தேனி மாவட்ட வன அலுவலரிடம் கேட்டபோது ஆண் பெண் இரண்டு சிறுத்தைகள் வந்ததாகவும் இரண்டும் வேளியில் சிக்கிய பொழுது ஒன்று உயிருடன் தப்பித்து வன அலுவலரை தாக்கி விட்டு வனப்பகுதியில் தப்பித்துச் சென்றதாகவும் மற்றும் ஒரு சிறுத்தை போடப்பட்டிருந்த வேளியில் சிக்கி மீள முடியாமல் உயிரிழந்ததாகவும், அதனை பிரேத பரிசோதனை செய்த பின்பு எரித்து அடக்கம் செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு சொந்தமான நிலத்தின் வேலியில் சிக்கி சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆட்டுக் கிடை உரிமையாளர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்திருந்த நிலையில், தற்பொழுது ஓ.பி. ரவீந்திரநாத் நிலத்தின் மேலாளர்களாக பணியாற்றும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை பின் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர். நிலத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத் மீதும் வன உரிமைச்சட்டப்படி வழக்கு பதிவு செய்யவுள்ளதாகவும் வன அலுவலர் தெரிவித்துள்ளார்.