தமிழகத்தில் உள்ள பெரும்பாலன மாவட்டங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பொழிவை பெறும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, குமரி மாவட்டங்கள் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவை பெறுகின்றன. வேளாண்மையை பிரதான தொழிலாக கொண்டுள்ள தேனி மாவட்டத்தில் பெரும்பாலும் நெல், திராட்சை, தென்னை, வாழை போன்ற விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார்  14,707 ஏக்கர்  நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.



ஆண்டுதோறும் வருடத்திற்கு இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த வருடமும் இந்த வருடமும் இரண்டு போகம் செய்ய முடியாத நிலையில் நெல் விவசாயம் உள்ளது . அதற்கான காரணமாக விவசாயிகள் கூறுவது சென்ற வருடமும் இந்தாண்டும் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் போதிய நீர் பற்றாக்குறை இருப்பதால் விவசாயத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.



தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையிலும் தற்போது நீர் இருப்பு குறைந்து 130 அடியில் குறைந்துள்ளது. இதற்கும் பருவ மழை போதியதாக இல்லாத நிலையே காரணம். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன்  மாதம் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை பெய்யும். அக்டோபர், நவம்பர், டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெய்யும் தற்போது தென்மேற்கு பருவமழை முடியும் தருவாயில் உள்ள நிலையில் தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆண்டுக்கு சராசரியாக  829. 80 மில்லி  மீட்டர் வரை மழை பெய்ய வேண்டும் .


இதில் தென்மேற்கு பருவமழை மூலம் இயல்பாக  170. 8 மில்லிமீட்டர் மழையும் பெய்யும். வடகிழக்கு பருவ மழையால் இயல்பாக 282.04 மில்லி மீட்டர் மழை கிடைக்கும். இது தவிர கோடை மற்றும் குளிர் காலங்களில் எஞ்சிய மழை வரத்து கிடைக்கும். பருவமழையில் நீரானது தென்மேற்கு பருவமழையின் போது மட்டுமே சராசரி மழை வரத்தை தவிர அதிகமாக கிடைக்கும்.  




இருப்பினும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் பெய்யும் மழையின் அளவு இந்த ஆண்டு கடுமையாக குறைந்துள்ளதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது 2019ஆம் ஆண்டு சராசரியாக  219. 80 மில்லி மீட்டர்,  2020ல் 180. 93 மில்லி மீட்டர், 2021 தற்போது மழையானது குறைந்து 70.95  மில்லி மீட்டர்  மழை பெய்து இருப்பது கடந்த 2  வருடத்தை காட்டிலும் மழை வரத்து குறைந்துள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழை குறைந்தாலும்  இனி வரும் வடகிழக்கு பருவமழை இயல்பு அளவைவிட  தேனி மாவட்டத்தில் அதிகம் பெய்ய்யும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!