தேனி மாவட்டத்தில் மிகவும் பிரிசித்தி பெற்ற அருள் மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவானது, சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைகாசி முதல் செவ்வாய்க்கிழமை வரை நடக்கும்  திருவிழாவாகும். இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்வார்கள். தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருவிழா நேற்று செவ்வாய்கிழமை முதல் அடுத்த ஒரு வார திருவிழாவாக துவங்கியிருக்கிறது.

Continues below advertisement

தென் மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு கோவில் திருவிழாக்கள் இருந்தாலும் மதுரை அழகர் கோவில் திருவிழாவை  போன்றே தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவும் மிகவும் சிறப்பானதாகும். வீரபாண்டியில் முல்லை பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில். வழக்கமாக, கோவில் திருவிழாவிற்கான திருக்கம்பம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்பாள் கோவில் வீட்டிலிருந்து கரகத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்படுவது வழக்கமாகும். ஒரு வாரம் திருவிழா நடப்பதால், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும். அந்தவகையில், இந்த ஆண்டும் ராட்டினங்கள் அமைப்பதற்கான பொது ஏலம் அறநிலையத்துறை சார்பில் சமீபத்தில் நடந்தது. வீரபாண்டி ராட்டினத்தை தேனியைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் ரூ.3.06 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தார். வீரபாண்டி கோவில் ராட்டினம் கடந்த ஆண்டு ரூ.2.55 கோடிக்கு ஏலம் போனது. அதாவது, கடந்த வருடத்தைவிட, ரூ.51 லட்சம் கூடுதல் தொகை கொடுத்து ராட்டினம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் திருவிழாவை மையப்படுத்தி பல்வேறு தொழில்களும் நடந்து வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில்  நேற்று தொடங்கிய வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா வரும் 13 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் மே 9 ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. இதனால் மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து  தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதேபோல தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா வரும் மே 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

இத்திருவிழாவை முன்னிட்டும் வரும் மே 12 ஆம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இரு விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் வரும் மே 17 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் முழு வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையை போன்றே தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவும் அப்பகுதியில் மிகவும் பிரபலமாகவே பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் தேனி மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.