தேனி பங்களாமேட்டில் பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை தாங்கினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர். இதில் பேசிய ஹெச்.ராஜா, ஸ்டாலின் அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை.




மத்திய அரசு செய்யும் நலத் திட்டங்கள் மட்டுமே மக்களுக்கு வந்து சேருகின்றன. அதில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தான் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குகிறோம் எனக் கூறி ஏமாற்றம் என அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள். தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கியதே திமுகவின் சாதனை என்று பகீர் கிளப்பினார். மேலும் பேசுகையில், மக்களால் அடித்து விரட்டப்பட வேண்டிய ஆட்சி தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இப்படியொரு மோசமான ஆட்சியைப் பார்க்கவே முடியாது. முதலமைச்சர் முதல் அனைவரும் உளறுபவர்களாக உள்ளனர்.




நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் போட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த தீர்மானம் வெறும் வெத்துக் கடுதாசி தான். கடந்த 2010ஆம் ஆண்டு திமுக இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவையில் தான் நீட் தேர்வு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வும் நடத்தப்பட்டது. அப்போது ஏன் மு.க.ஸ்டாலினும் அவருடைய அப்பா கருணாநிதியும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வை எதிர்த்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாமே. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தான்.




முதலமைச்சருக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டுமென்றால் அவர் தட்ட வேண்டிய இடம் நீதிமன்றத்தின் கதவுகள். அதிலும் குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். இதனை திசை திருப்பும் வேலையை முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு 31,000 கோடி ரூபாய் அளவில் நலத்திட்டங்களை வழங்க வந்த பிரதமரிடம் ஒப்பாரி வைப்பதற்கு பதிலாக, நளினி சிதம்பரத்தின் வீட்டிற்கு தினந்தோறும் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பாரி வைக்கலாம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். திமுக என்ற கட்சி ஊழலில் பிறந்து ஊழலிலேயே வளர்ந்த ஒன்று. அதில் ஒரு சில ஊழல் பட்டியலை நமது மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ளார். திமுக குறித்து எந்தவொரு ஆதாரமும் வெளியிடத் தேவையில்லை. ஏனென்றால் திமுக என்றாலே ஊழல் கட்சி என்று சாதாரண மக்களுக்கு கூட தெரியும். சர்க்காரியா கமிஷன் கூறியது போல, அவர்கள் விஞ்ஞான ரீதியாக செய்யக் கூடியவர்கள் எனக் குறிப்பிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண