தேனி மாவட்டம் தேனி அமச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார் (35).இவரது மனைவி அஜித்தா (33). மகள் பிரித்விகா(5). அஜித்தா தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். இந்த குடும்பத்தினர் அரண்மனைப்புதூர் அருகே உள்ள முல்லை நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். சதீஷ்குமார் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேலும் தனியாக வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஏதோ ஒரு மன வருத்தத்தில் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தாவின் குடும்பத்தினர் நேற்று காலை முதல் அஜித்தா மற்றும் சதீஷ்குமார் ஆகியோருக்கு தொலைபேசி மூலமாக அழைத்தும் தொடர்பு கொள்ள முடிய வில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை சதீஷ்குமாரின் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அஜித்தாவின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளனர். அஜித்தாவின் தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வந்து பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு அஜித்தா மற்றும் குழந்தை பிரித்திகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், சதீஷ்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தடைய அறிவியல் துறையினரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
இதில் இந்த சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்திற்கும் மேல் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டது.மேலும் காவல்துறையிணர் நடத்திய சோதனையில், சதீஷ்குமார் எழுதிய ஒரு கடிதமும் கிடைக்கப்பெற்றது. அதில் இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை என்றும்,அதனால் இறந்து விட முடிவு செய்ததாகவும், தான் இறந்த பின் மனைவியையும், குழந்தையையும் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாததால் அவர்களையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும்,யாரும் தவறாக கருதக் வேண்டாம்.அனைவரும் என்னை மன்னிக்கவும் என எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மூவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்குமார் ஏன் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்தார்? மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.