தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நீதிராஜன் அனுசியா தம்பதியினரின் மகன் சினேகன்(14)அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சினேகன் சிறுவயது முதலே நீச்சல் பயிற்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்து மாநில மற்றும் தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை நீச்சல் பயிற்சி செய்து 56 கிலோமீட்டர் தூரத்தை 19.45 நிமிடங்களில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.




தற்போது அயர்லாந்து முதல் ஸ்காட்லாந்து வரையிலான நார்த் சானல் எனப்படும் வடக்கு கால்வாய் 35 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி 36 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்தார். 12 டிகிரி செல்சியஸ் அளவில் மிகவும் அதிக குளிர் மற்றும் ஆபத்தை விளைவிக்க கூடிய சுறா, ஜெல்லி மீன்கள் நிறைந்த அயர்லாந்து கடல் பகுதியை நீந்தி கடப்பது மிகவும் கடினமான சூழலில் நீச்சல் வீரர் தேனி சினேகன் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் குழுவினர் 6 பேர் இணைந்து இந்த சாதனையை மேற்கொண்டுள்ளனர்.




இங்கிலாந்து டொனகடே துறைமுக பகுதியில் பயிற்சிக்கு பின் வடக்கு அயர்லாந்திவிருந்து கடந்த 20ம் தேதி காலை 6.30 மணிக்கு நீச்சல் சாதனையை துவக்கி இரவு 8 மணி 9 நிமிடங்களில் மொத்தம் 14 மணி மற்றும் 36 நிமிடங்களில் ஸ்காட்லாந்து பகுதியை நீந்தி சாதனை புரிந்தார். கடந்த 2022 வருடம் மார்ச் 28ம் தேதியில் தனுஷ்கோடி முதல் தலைமன்னாரு, தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி பகுதியை 56 கிலோமீட்டர் தூரத்தை குறுகிய நேரத்தில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.




இந்த சாதனை குறித்து தங்களது குழுவுடன் மதுரை வந்த சினேகன் கூறுகையில்,  2022 மார்ச் 28ல் தனுஷ்கோடி முதல் தலைமன்னார், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ., தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்தி சாதனை படைத்தேன். இப்போது சவாலான அயர்லாந்து கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளேன். எதிர்காலத்தில் இங்கிலாந்து - பாரீசிற்கு இடையே 42 கி.மீ., துாரமுள்ள ஆங்கில கால்வாயை நீந்தி கடப்பதே என் லட்சியம். இதற்கான பயிற்சியை அடுத்த மாதம் துவங்க உள்ளேன் என்றார். மேலும் சினேகன் சாதனை படைப்பு குறித்து பயிற்சியாளர் விஜயகுமார் கூறுகையில், சினேகன் கடந்த 8 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும், துணிச்சலும் அதிகம் உள்ளது என்றார். சாதனை படைத்து வந்த சினேகன் மற்றும் குழுவினருக்கு சொந்த ஊரில் பல்வேறு தரப்பினர் பாராட்டையும் வரவேற்பையும் அளித்தனர்.