கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரிக்கொம்பன் என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8 பேரை கொன்றதாகவும், ஏராளமான விளை பயிர்களையும் சேதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த காட்டு யானை கடந்த மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினரால் மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த யானை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதகானம் வனப்பகுதியில் விடப்பட்டது. தமிழக,கேரள மாநில எல்லையான இப்பகுதியில் யானையை விடுவதற்கு முன்பு அதன் கழுத்தில், ரேடியோ காலர் என்ற கருவி பொருத்தப்பட்டது. அதன் மூலம் யானையின் நடமாட்டம் இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.




அப்போது அந்த யானை மங்கலதேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்து, தேனி மாவட்டம்  மேகமலை வனப்பகுதியில் யானை தஞ்சம் அடைந்தது.  இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கம்பம் நகருக்குள் அரிக்கொம்பன் யானை புகுந்தது. அப்போது கம்பம் நகரில் வீதி, வீதியாக யானை ஓடியது. இதனால் யானையை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கம்பம் நகரில் அட்டகாசம் செய்த யானையை ஊருக்குள் இருந்து விரட்டும் பணியில் வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து ஈடுபட்டனர். இந்த நிலையில் அன்றிரவு  அந்த யானை கம்பம் புறவழிச்சாலையில் உள்ள வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தது.  இரவு வரை இருந்த யானை அங்கேயே முகாமிட்டிருந்த நிலையில் நள்ளிரவில் கம்பம் அருகே சாமாண்டிபுரம் வழியாக முல்லைப்பெரியாறு நோக்கி சென்றது.




அதன்பிறகு வயல்வெளி வழியாக சுருளிப்பட்டிக்கு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் நுழைந்தது. செல்லும் வழியில், சுருளிப்பட்டி சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் பலா மரத்தில் காய்த்து தொங்கிய பலா காய்களை அரிக்கொம்பன் தின்றது. அதன்பிறகு சுருளிப்பட்டியில் யானைகஜம் என்ற பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் கம்பிவேலியை சாய்த்துவிட்டு உள்ளே நுழைந்தது. கம்பத்தில் இருந்து சுருளிபட்டிக்கு இடம்பெயர்ந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரை அரிக்கொம்பன் யானை கூத்தனாட்சியாறு வனப்பகுதியில் உலா வந்தது. அதன்பிறகும் அங்கேயே அந்த யானை முகாமிட்டிருந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மேல் ஹைவேவிஸ் மலைப்பகுதியை நோக்கி அரிக்கொம்பன் யானை இடம்பெயர்ந்ததாக கூறபப்ட்டது.




இதற்கிடையே அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப், ஆனைமலை பகுதிகளில் இருந்து சுயம்பு, உதயன், அரிசி ராஜா என்ற முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கம்பத்துக்கு வரவழைக்கப்பட்டன. சுயம்பு கும்கி யானை நள்ளிரவிலும், மற்ற 2 கும்கி யானைகள் நேற்று காலையிலும் கம்பத்துக்கு வந்தடைந்தன. இந்த  3 யானைகளும் கம்பம் வனச்சரக அலுவலக பகுதியில் கட்டப்பட்டுள்ளது. அரிக்கொம்பன் யானை வனப்பகுதியை விட்டு ஊருக்குள் புகுந்தால் அதனை கும்கி யானைகள் மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாறாக அது வனப்பகுதியை நோக்கி சென்றால், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் கூறப்படுகிறது. தற்போது கூத்தனாட்சியாறு மலையடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண