தேனி மாவட்டம்  பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்துக்கு பின்புறம் உள்ள ஒரு குடியிருப்பில் சந்தேகப்படும்படியான நபர்கள் வசிப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உளவுத்துறை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது BSNL செல்போன் டவரில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி அலைக்கற்றைகளை திருடி பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதுகுறித்து BSNL. அலுவலகத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேனி BSNL அலுவலக தொழில்நுட்ப பிரிவு அதிகாரி முனியாண்டி தேனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் தேனி காவல் நிலையை  இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்தார்.




சம்பந்தப்பட்ட வீட்டுக்கு போலீசார் சென்றபோது வீடு பூட்டி இருந்தது. பின்னர் அந்த வீட்டின் கதவை போலீசார் திறந்து சோதனையிட்டனர். அப்போது அங்கு அலைக்கற்றைகளை திருடும் நவீன தொழில்நுட்ப கருவிகள், ஏராளமான செல்போன் சிம் கார்டுகள் இருந்தன. பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், இந்த அலைக்கற்றை திருட்டில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த சஜீர் (வயது 41), அதே பகுதியை சேர்ந்த முகமது ஆஷிப் (21) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களை நேற்று இரவு தேனியில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இதேபோல் தேனியில் மற்றொரு வீட்டிலும், ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தில் 2 வீடுகளிலும் தொழில்நுட்ப கருவிகளை வைத்து BSNL மற்றும் தனியார் செல்போன் டவர்களில் இருந்து அலைக்கற்றைகளை திருடி பயன்படுத்தியதாக தெரியவந்தது. அவர்கள் கூறிய மற்ற 3 வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.




இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிம் கார்டுகள் மற்றும் அலைக்கற்றைகளை திருடுவதற்கான 31 நவீன தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த வழக்கில் சஜீர், முகமது ஆஷிப் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்ததும் தென்மண்டல ஐஜி அஷ்ராகார்க் தேனிக்கு வந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினார். மேலும் மத்திய உளவுப்பரிவு, மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள், கியூ பிரிவு போலீசார் ஆகியோரும் தேனி வந்து பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான நபர்களுக்கு பயங்கரவாத அமைப்புகள், நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா? எதற்காக இந்த அலைக்கற்றை திருட்டில் ஈடுபட்டார்கள்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கைதான நபர்களின் பின்னணியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் டவர்களில் இருந்து அலைக்கற்றைகளை திருடி, வெளிநாடுகளுக்கு குறைந்த செலவில் பேசுவதற்கு பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் இந்த தொழில்நுட்ப கருவியில் ஒரே நேரத்தில் 30 சிம் கார்டுகளை பொருத்தி கொள்ள முடியும். அதன் மூலம் பேசும் போது 5 நிமிடத்துக்கு ஒருமுறை வெவ்வேறு டவர்களில் இருந்து பேசுவது போல் இணைப்பு மாறிக் கொண்டே இருக்கும். இதனால் இந்த கருவியை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்களை போலீசார் கைது செய்வது சவாலாகி விடும். எதற்காக அவர்கள் தேனியில் இந்த அலைக்கற்றை திருட்டில் ஈடுபட்டார்கள் என்று தெரியவில்லை. பிடிபட்ட இருவரும் 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. எனவே அவர்களின் பின்னணியில் இருந்து செயல்பட்ட கும்பலை பிடித்தால் தான் மேலும் விவரங்கள் தெரியவரும் என்றனர். இந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.