ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1913 ஆண்டு மதுரை முதல் போடி வரையிலான 90 கிலோமீட்டர்கான ரயில் பாதை அமைக்கப்பட்டு , அதில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது . இந்த ரயில் பாதையானது கேரள மாநிலம் மற்றும் போடி நகர் பகுதியில் விளையும் ஏலக்காய், காபி, தேயிலை போன்ற நறுமணப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தொடங்கப்பட்டது. இந்த நறுமண பொருள்கள் கேரள மாநிலத்திலிருந்து போடி நகருக்கு கொண்டு வரப்பட்டு பின் போடி நகரில் இருந்து மதுரைக்கு ரயில் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. பின் ஆங்கிலேயர்கள் வெளியேற்றத்திற்கு பிறகு மத்திய அரசு கட்டுப்பாட்டிற்கு வந்த ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு பெரும் முயற்சி எடுத்தது. ஒரு பகுதியாக போடி முதல் மதுரை வரையிலான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. இத்திட்டத்திற்காக 2009ஆம் ஆண்டு போடி முதல் மதுரை வரையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்தாண்டு மதுரை - ஆண்டிபட்டி வரையிலான பணிகள் முடிவுற்று வெள்ளோட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி முதல் போடிநாயக்கனூர் வரையிலான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தேனி வரையில் பணிகள் முடிவுற்றது. ஆண்டிபட்டி முதல் தேனி வரையில் ரயில்வே துறையினரால் முதல்கட்ட என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த முதல் கட்ட சோதனையில் ஓட்டத்தில் ஆண்டிபட்டியில் இருந்து புறப்பட்ட இரயில் இன்ஜின் 80 முதல் 100கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு ரயிலின் தன்மை, ரயில் வழித்தடம், ரயில் வழித்தடத்தில் உறுதித்தன்மை குறித்த சோதனை ஓட்டத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இத்திட்டத்தில் மதுரை ஆண்டிப்பட்டி இடையே 58 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். தற்போது ஆண்டிப்பட்டி - தேனி இடையே அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி 90 கி.மீ. வேகத்தில் முதல் கட்ட ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட , மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் கட்டுமான பிரிவு இணை பொறியாளர் சூரியமூர்த்தி தலைமையில் நடக்கிறது.
அதி வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், பொதுமக்கள் ரயில் பாதையை கடக்கவோ நெருக்கவோ கூடாது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்திற்கு பின் தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு கமிஷனர் இம்மாத இறுதிக்குள் ஆய்வு செய்து ஒப்புதல் கிடைத்ததும் தேனி வரை ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது. மீதமுள்ள தேனி - போடி இடையே 15 கி.மீ. துாரத்திற்கான பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற