Madurai Train Fire Accident: மதுரை ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக இன்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை..

இன்று இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு ஆணையர் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Continues below advertisement
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  கடந்த 14-ஆம் தேதி 63 பயணிகளுடன் தென்னந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவிற்காக புறப்பட்ட ரயில் பெட்டியானது மதுரையில் நேற்று முன்தினம் காலை ரயில்வே நிலையம் அருகே போடிலைன் யார்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது. 
 
அப்போது ரயிலில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றபோது சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி 9 பேர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர் மேலும் 8 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தனர்.  இந்த நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 174 பிரிவின் கீழ் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் தீ விபத்து நடைபெற்ற ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள்  இரு நாட்களாக  சோதனை நடத்தி தீ விபத்துக்கு காரணமான பல்வேறு ஆதாரங்களை கைப்பற்றினர். இந்நிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக தெற்கு சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி நேற்று காலை சட்ட விசாரணை நடத்தினார். முதற்கட்டமாக ரயில் தீ விபத்தில் காயமடைந்து  மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து ரயில் விபத்தின்போது ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய 5 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் இரு சமையல் உதவியாளர்களை தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

 
இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் நேரில் சென்று ரயில் பெட்டியில் ஆய்வு மேற்கொண்ட பின்பாக மாலை மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரயில் விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட ரயில்வே காவல்துறையினர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரிடமும் விசாரணை மேற்கொண்டார் முதல் நாள் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு ஆணையர் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளார் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த விசாரணையின்போது பொதுமக்கள் யாரேனும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வேறு ஏதேனும் ஆவணங்களோ இருந்தால் நேரடியாக தெரிவிக்கலாம் எனவும் மேலும் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம் மூலமாக அனுப்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
 
Continues below advertisement